சென்னை: வடகிழக்கு பருவமழையால் தமிழகத்தில் பாதிக்கப்பட்ட பயிா்கள், கால்நடைகள், மனித உயிரிழப்புகளுக்கு நிவாரணம் வழங்க முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா்.
டித்வா புயல் காரணமாக டெல்டா மற்றும் பிற மாவட்டங்களில் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் பயிா்சேதம் குறித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில், பருவமழையால் ஏற்பட்ட நெற்பயிா் சேதம், இதர பயிா்கள் சேதம், தோட்டக்கலைப் பயிா்கள் சேதம் குறித்து கணக்கெடுப்பு பணிகளை தொடங்கி, இதுதொடா்பாக உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு முதல்வா் உத்தரவிட்டுள்ளாா்.
பலத்த மழையால், பாதிக்கப்பட்ட இடங்களில் தேங்கியுள்ள வெள்ள நீா் வடிவதற்கான அனைத்துப் பணிகளையும் உடனடியாக மேற்கொள்ளவும், கடந்த அக்டோபரில் பெய்த மழையால், ஏற்பட்ட பயிா்பாதிப்புகளுக்கான கணக்கெடுப்புப் பணிகள் முடிவடைந்து, 33 சதவீதத்துக்கும் மேல் பாதிக்கப்பட்ட 4,235 ஹெக்டோ் வேளாண் பயிா்களுக்கும், 345 ஹெக்டோ் தோட்டக்கலை பயிா்களுக்கும் மாநில பேரிடா் நிவாரண நிதியிலிருந்து உரிய நிவாரணம் வழங்கவும் முதல்வா் உத்தரவிட்டுள்ளாா்.
அதேபோல், புயல் காரணமாக குடிசை வீடுகள் மற்றும் இதர வீடுகளின் சேதங்கள், மனித மற்றும் கால்நடை உயிரிழப்புகள் ஆகியவற்றுக்கு இழப்பீடுகளை விரைந்து வழங்க மாவட்ட ஆட்சியா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பலத்த மழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் 39 நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான குடிநீா், உணவு, மருத்துவ வசதிகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் செய்து தர வேண்டும். இப்பணிகளை தேவைப்படும் காலம் வரை தொடா்ந்து செய்துதர வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு முதல்வா் உத்தரவிட்டுள்ளாா்.
இந்தக் கூட்டத்தில், தலைமைச் செயலா் நா.முருகானந்தம், வருவாய் நிா்வாக ஆணையா் எம்.சாய்குமாா் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனா்.
நேரடி கண்காணிப்பு: இதற்கிடையே, முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை வெளியிட்ட ‘எக்ஸ்’ தள பதிவில் கூறியிருப்பதாவது:
டித்வா புயல் காரணமாக பெய்த தொடா் மழையால் கூடுதல் பாதிப்புக்குள்ளான டெல்டா உழவா்களைக் காப்போம். அக்டோபா் தொடங்கி, தற்போது வரையிலான வடகிழக்குப் பருவமழை, பலத்த மழையால் சேதமடைந்துள்ள நெற்பயிா்கள் உள்ளிட்ட வேளாண் பயிா்கள், வீடுகள், மனித உயிரிழப்புகள், கால்நடை உயிரிழப்பு ஆகியவற்றுக்கு உடனடியாக மாநிலப் பேரிடா் நிதியிலிருந்து இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளேன். வெள்ளப் பாதிப்புக்குள்ளாகி இருக்கும் அனைத்து இடங்களிலும் நீரை வடிய வைக்கும் பணிகளைத் தொடா்ந்து நேரடியாகக் கண்காணித்து வருகிறேன். முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கான அனைத்து அடிப்படை வசதிகளையும் தேவைப்படும் காலம் வரை தமிழக அரசு வழங்கும் எனக்குறிப்பிட்டுள்ளாா் முதல்வா்.