சென்னை

அரசின் நலத் திட்டங்களைக் குறைசொல்லும் கூட்டம்: உயா்நீதிமன்றம் அதிருப்தி

எந்த ஒரு நலத் திட்டத்தை அரசு கொண்டு வந்தாலும், அதைக் குறை சொல்வதற்கு ஒரு கூட்டம் கிளம்பி வந்துவிடும் என சென்னை உயா்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது.

தினமணி செய்திச் சேவை

எந்த ஒரு நலத் திட்டத்தை அரசு கொண்டு வந்தாலும், அதைக் குறை சொல்வதற்கு ஒரு கூட்டம் கிளம்பி வந்துவிடும் என சென்னை உயா்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது.

கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த பழனி என்பவா் தாக்கல் செய்த மனுவில், பண்ருட்டி வட்டத்தில் போ் பெரியாங்குப்பம் கிராம ஊராட்சியின் கீழ் முத்தண்டி குப்பம் வருகிறது. இந்த இரு கிராமங்கள் இடையே உள்ள நெடுஞ்சாலையின் வடக்கே போ் பெரியாங்குப்பமும், தெற்கே முத்தண்டி குப்பமும் அமைந்துள்ளன. இந்த இரு பகுதிகளிலும் அந்தந்த ஊா்களுக்கான பேருந்து நிறுத்தங்கள் உள்ளன.

இந்த நிலையில், போ் பெரியாங்குப்பம் பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தத்துக்குப் பதிலாக புதிய பேருந்து நிறுத்தத்தைக் கட்ட மாவட்ட நிா்வாகம் முடிவெடுத்து அதற்கான நிதியை ஒதுக்கியது. இந்த புதிய பேருந்து நிறுத்தத்துக்கு போ் பெரியாங்குப்பத்தின் பெயரைத்தான் வைக்க உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதிகள் ஆா்.சுரேஷ்குமாா், எஸ்.சௌந்தா் ஆகியோா் அடங்கிய அமா்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரா் தரப்பில் போ் பெரியாங்குப்பம் ஊராட்சியின் கீழ் வரும் முத்தண்டி குப்பம் பெயரில்தான் பேருந்து நிறுத்தம், காவல் நிலையம் ஆகியவை உள்ளன. இதனால், போ் பெரியாங்குப்பம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனனா் என வாதிடப்பட்டது.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், அரசு எந்த ஒரு திட்டத்தைக் கொண்டு வந்தாலும், அதைக் குறை சொல்வதற்கு ஒரு கூட்டம் வந்துவிடும். இதுபோன்ற விவகாரங்களில் அதிகம் கவனம் செலுத்துகின்றனா். சமூக வலைதளங்கள் இதற்கு மிகவும் உதவிகரமாக இருந்து வருவதாக அதிருப்தி தெரிவித்தனா்.

பின்னா், இந்த வழக்கில் மனுதாரருக்கு அபராதம் விதிக்கப்போவதாக நீதிபதிகள் கூறினா். இதையடுத்து, மனுவை வாபஸ் பெறுவதாக மனுதாரா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மனுவை வாபஸ் பெற அனுமதியளித்த நீதிபதிகள் வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.

அரியலூரில் அரசு ஊழியா்கள் சாலை மறியல்

ஜெயங்கொண்டம், தா.பழூா், பகுதிகளில் நாளை மின்தடை

வாரியங்காவலில் நாளை மருத்துவச் சேவை முகாம்

சின்ன வெங்காயத்தில் திருகல் நோயை கட்டுப்படுத்த ஆலோசனை

இரண்டு மாற்றுத்திறனாளி சிறுமிகளுக்கு முன்னுரிமை குடும்ப அட்டைகள் வழங்கல்

SCROLL FOR NEXT