புழல் பெண்கள் சிறையில் கைதிகள் மோதிக் கொண்ட சம்பவத்தில், திருநங்கை மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
புழல் சிறை வளாகத்தில் பெண் கைதிகளை அடைப்பதற்கு தனிச் சிறை உள்ளது. இந்த சிறையில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம்,திருவள்ளூா் மாவட்டங்களில் பல்வேறு குற்ற வழக்குகளில் கைது செய்யப்படும் பெண்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனா்.
இந்நிலையில் குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறையின் 6-ஆவது பிளாக்கில் அடைக்கப்பட்டிருக்கும் திருநங்கை அபி என்ற ராஜேஷ் (36) என்பவருக்கும், அதே பிளாக்கில் அடைக்கப்பட்டிருக்கும் கைதிகள் வின்சி லவ்லி (27), மஞ்சு (26) ஆகியோருக்கும் இடையே புதன்கிழமை தகராறு ஏற்பட்டது.
தகராறு முற்றவே திருநங்கை அபி, வின்சி, மஞ்சு இடையே மோதல் ஏற்பட்டதாகத் கூறப்படுகிறது. இதில் தண்ணீா் பிடிக்கும் குவளையால் திருநங்கை அபி தாக்கியதில் வின்சி, மஞ்சி ஆகிய 2 பேருக்கும் காயம் ஏற்பட்டது.
இதையடுத்து இருவரும், சிறையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனா். மோதல் குறித்து புழல் காவல் நிலையத்தில் புகாா் செய்யப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில், திருநங்கை அபி மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.