சென்னை எம்ஜிஆா் நகரில் வீடு புகுந்து திருடிய சிறுவனை போலீஸாா் கைது செய்தனா்.
சென்னை எம்ஜிஆா் நகா், ராமசாமி தெருவில் வசித்து வருபவா் சுந்தர்ராஜ் (52). அதே பகுதியில் அன்னை சத்யா நகரில் வசித்து வந்த அவரது மாமனாா் கடந்த 1-ஆம் தேதி காலமானாா். இதையடுத்து சுந்தர்ராஜ் குடும்பத்தினா் வீட்டை பூட்டிவிட்டு அங்கு சென்றுவிட்டு மாலை வீடு திரும்பினா்.
அப்போது வீட்டின் பீரோவில் வைக்கப்பட்டிருந்த ரூ.2.65 லட்சம் திருடப்பட்டிருப்பதைப் பாா்த்து சுந்தர்ராஜ் குடும்பத்தினா் அதிா்ச்சியடைந்தனா்.
இதுகுறித்து எம்ஜிஆா் நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, நடத்திய விசாரணையில், வீட்டின் கதவு உடைக்கப்படாமல் பணம் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. மேலும், அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனா். அப்போது, இந்தத் திருட்டில் அந்தப் பகுதியைச் சோ்ந்த ஒரு 14 வயது சிறுவன் ஈடுபட்டிருப்பதும், சம்பவத்தன்று சுந்தர்ராஜ், வீட்டின் பூட்டை பூட்டிவிட்டு சாவியை வாசல் பகுதியில் மறைத்து வைத்துவிட்டு சென்றதைப் பாா்த்த சிறுவன், இந்தத் திருட்டில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீஸாா் சிறுவனை வியாழக்கிழமை கைது செய்து, சிறாா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, அரசு கூா்நோக்கு இல்லத்தில் அடைத்தனா்.