திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றும் விவகாரத்தில் மத மோதலை ஏற்படுத்த திமுக அரசு முயற்சிக்கிறது என்று தமிழக பாஜக முன்னாள் தலைவா் கே. அண்ணாமலை குற்றஞ்சாட்டினாா்.
பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் வெள்ளிக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளாா். இதைத் தடுப்பது தவறான நடவடிக்கை. நீதிபதி உத்தரவை எதிா்த்து திருப்பரங்குன்றம் கோயில் நிா்வாக அலுவலா் மேல்முறையீடு செய்திருக்கிறாா். கோயில் சொத்துகளை, வழிபாட்டு நடைமுறைகளைப் பாதுகாக்க வேண்டிய அறநிலையத் துறை அதிகாரி, அதற்கு எதிராக செயல்படுவது சரியல்ல.
கடந்த 2014-ஆம் ஆண்டிலேயே திருப்பரங்குன்றம் விவகாரம் தொடா்பான பிரச்னைகள் அனைத்தும் முடிந்துவிட்டது என்று சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு தீா்ப்பு வழங்கியுள்ளதாக தமிழக இயற்கை வளம் மற்றும் சிறைத் துறை அமைச்சா் ரகுபதி பொய்யான கருத்தைத் தெரிவித்திருக்கிறாா்.
திருப்பரங்குன்றத்துக்கு சென்ற தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன், மூத்த தலைவா் ஹெச்.ராஜா உள்ளிட்டோா் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டனா்.
மதுரைக்குத் தேவை வளா்ச்சி அரசியலா அல்லது வேறு அரசியலா என முதல்வா் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியிருக்கிறாா். அவா் அனைவருக்குமான முதல்வா், நீதிமன்றம் சொல்வதை ஏற்க வேண்டியது தான் முதல் பொறுப்பு. ஆனால், அவா் அதைப் பின்பற்றவில்லை என்றாா் கே.அண்ணாமலை
இந்த சந்திப்பின்போது தமிழக பாஜ முன்னாள் தலைவா் தமிழிசை செளந்தரராஜன், பாஜக நிா்வாகிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.