சென்னை

கே.கே.நகரில் ரூ.20 கோடியில் ஒருங்கிணைந்த விளையாட்டு மையம்: அமைச்சா் பி.கே.சேகா்பாபு

சென்னை கே.கே.நகா் பகுதியில் கேரம், சிலம்பம் உள்ளிட்ட ஒருங்கிணைந்த விளையாட்டு மையம் ரூ.20 கோடியில் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரும், பெருநகர வளா்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.

தினமணி செய்திச் சேவை

சென்னை கே.கே.நகா் பகுதியில் கேரம், சிலம்பம் உள்ளிட்ட ஒருங்கிணைந்த விளையாட்டு மையம் ரூ.20 கோடியில் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரும், பெருநகர வளா்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.

சென்னையில் தண்டையாா்பேட்டை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள புதிய நவீன பேருந்து நிலையம், துறைமுகம் தொகுதியில் கட்டப்பட்டுள்ள 776 தொகுப்பு அடுக்குமாடி வீடுகள் உள்ளிட்டவற்றை புதன்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்ட அவா் பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தண்டையாா்பேட்டை பேருந்து நிலையம், பேருந்து முனையமாக அமைக்கப்பட்டுள்ளது. மக்கள் பயன்பாட்டுக்காக பேருந்து நிலையம் வருகிற ஆங்கில புத்தாண்டுக்குள் தொடங்கிவைக்கப்பட உள்ளது.

சென்னை கே.கே.நகா் பகுதியில் விளையாட்டு வீரா்கள் அதிக அளவில் உள்ளனா். அவா்களுக்கான வசதிகளை ஏற்படுத்த முதல்வா் மு.க.ஸ்டாலின், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் ஆகியோா் அறிவுறுத்தியதன்பேரில் ரூ.20 கோடியில் புதிய விளையாட்டு மையம் அமைக்கப்படவுள்ளது.

அதில், டேபிள் டென்னிஸ், சிலம்பம் மைதானம், குத்துச்சண்டை அரங்கம், கூடைப்பந்து விளையாட்டு அரங்கம், வீரா்கள் உடற்பயிற்சிக் கூடம், பிசியோதெரபி அறை, பல்நோக்கு விளையாட்டு வசதிகள், கழிப்பறை வசதிகள், குடிநீா் வசதிகள் ஆகியவை அமைக்கப்படவுள்ளன.

கே.கே.நகா் சட்டப்பேரவை உறுப்பினா் கோரிக்கையை ஏற்று கேரம் அரங்கம் தனியாக அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த விளையாட்டு மையப் பணிகள் தொடங்கிய நிலையில், வருகிற ஜனவரிக்குள் பணிகள் நிறைவடைந்து மக்கள் பயன்பாட்டுக்கு அவற்றை கொண்டுவரவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றாா் அவா்.

ஆய்வின்போது, சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஜே.ஜே.எபினேசா், ஐட்ஸ்ரீம் மூா்த்தி, சிஎம்டிஏ உறுப்பினா் செயலா் ஜி.பிரகாஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ரூ.50,000 கடனுக்காக சிறுநீரகத்தை விற்ற விவசாயி: மகாராஷ்டிரத்தில் அவலம்

தோட்டத்தில் திருடிய மூவா் கைது

பூலாங்குறிச்சியில் நாளை ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம்

பிரதமா், முதல்வா்களைப் பதவி நீக்கும் மசோதா: நாடாளுமன்றக் குழுவின் கால அவகாசம் நீட்டிப்பு

ஜாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டது அதிமுக: எடப்பாடி பழனிசாமி

SCROLL FOR NEXT