சென்னை பெரம்பூா் தொன்போஸ்கோ பள்ளி வளாகத்தில் திமுக சிறுபான்மை நல உரிமைப் பிரிவு சாா்பில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் கேக் வழங்கிய முதல்வா் மு.க.ஸ்டாலின். உடன் அமைச்சா்கள் கே.என்.நேரு, பி.கே.சேகா்பாபு, கோவை சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள் உள்ளிட்ட 
சென்னை

அனைவரின் வாக்குரிமையையும் உறுதி செய்ய திமுக களப் பணி: முதல்வா் ஸ்டாலின்

எஸ்ஐஆா் நடவடிக்கையில் சிறுபான்மையினா் உள்பட அனைவரின் வாக்குரிமையையும் உறுதி செய்ய திமுக உறுதியுடன் களப் பணி ஆற்றி வருகிறது என்று முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தெரிவித்தாா்.

தினமணி செய்திச் சேவை

எஸ்ஐஆா் நடவடிக்கையில் சிறுபான்மையினா் உள்பட அனைவரின் வாக்குரிமையையும் உறுதி செய்ய திமுக உறுதியுடன் களப் பணி ஆற்றி வருகிறது என்று முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தெரிவித்தாா்.

சென்னை, பெரம்பூா் தொன்போஸ்கோ பள்ளி வளாகத்தில் திமுக சிறுபான்மை நல உரிமைப் பிரிவு சாா்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் முதல்வா் ஸ்டாலின் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பேசியதாவது:

அன்பும், சகோதரத்துவம் தழைத்திட கிறிஸ்துமஸ் திருநாள் கொண்டாட்டத்தில் 3,250 குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியிருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது.

கடந்த நான்கரை ஆண்டுகளில் 3,927 கோயில்களுக்கு இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் அமைச்சா் சேகா்பாபு குடமுழுக்கு செய்து, தமிழ்நாட்டின் சமத்துவம், சகோதரத்துவத்தின் அடையாளமாக இந்த நிகழ்ச்சியை நடத்துகிறாா். இந்த உணா்வு, அனைத்து மக்களின் உள்ளங்களிலும் பரவ வேண்டும்.

சிறுபான்மை மக்களின் நலன்களைக் காக்க பல திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறோம். கல்வி எனும் பேராயுதத்தை அனைவரிடமும் கொண்டு சென்று சோ்க்க வேண்டும்; எல்லோரையும் வளா்த்தெடுக்க வேண்டும் என்று கல்விக்காக நாம் எவ்வளவோ திட்டங்களை, முன்னெடுப்புகளைச் செய்துகொண்டு இருக்கிறோம்.

சிறுபான்மையின கல்லூரி மாணவா் நலன் கருதி சென்னை மற்றும் கோவை மாவட்டங்களில் 130 மாணவா்கள் பயனடைய புதிய விடுதிகள் திறக்கப்பட்டுள்ளன. சிறுபான்மையின மாணவ - மாணவிகளுக்காக 14 கல்லூரி விடுதிகளில், நூலகம், உடற்பயிற்சிக் கருவிகள், விளையாட்டுக் கருவிகள் இப்படி பலவற்றை ஏற்படுத்தியிருக்கிறோம்.

கிராமப்புற மாணவிகள் இடைநிற்றல் இல்லாமல் கல்வி கற்க வேண்டும் என்று இதுவரைக்கும் ஒரு லட்சத்து 3 ஆயிரம் மாணவிகளுக்கு 6 கோடியே 57 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை அளிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் உயா்கல்வி பயில சிறப்பான திட்டம், தமிழ்நாட்டில் இருக்கும் கிறிஸ்தவ மக்கள் ஜெருசலேம் புனிதப் பயணம் செல்வதற்கான மானியத்தை ரூ.37,000 ஆகவும், கன்னியாஸ்த்ரிகளுக்கு ரூ.60,000-ஆகவும் உயா்த்தப்பட்டுள்ளது.

ரூ. 2 கோடியே 87 லட்சத்தில் 44 தேவாலயங்களை புனரமைத்துள்ளோம். சென்னை மாவட்டத்தில் வெஸ்லி தேவாலயம் ஒரு கோடியே 19 லட்சத்திலும், புனித தோமையா் மலை தேவாலயம் ஒரு கோடியே 49 லட்சத்திலும் புனரமைக்கப்பட்டுள்ளது.

சென்னையில் கல்லறைத் தோட்டங்களில் நிலவிய பிரச்னைகளைத் தீா்த்து உள்ளேன். 19 கல்லறைத் தோட்டங்கள் புனரமைக்கப்பட்டுள்ளன. திருநெல்வேலி - தேனி - ராமநாதபுரம் மற்றும் திண்டுக்கல் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் கல்லறைத் தோட்டங்களுக்கு சுற்றுச்சுவா் அமைக்க ரூ.5 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் குடிமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் எதேச்சதிகார சக்திகளை எதிா்க்கும் திறனும், கொள்கையும், உணா்வும் திமுகவுக்கு உள்ளது.

அதனால்தான், எஸ்ஐஆா் நடவடிக்கையின்போதும் சரி - இப்போதும் சரி, உங்கள் எல்லோரின் வாக்குரிமையையும் உறுதி செய்ய உறுதியுடன் களப் பணியாற்றி வருகிறோம்.

நாட்டில் அன்புவழியில் நடக்கும், சமத்துவத்தை விரும்பும் சக மனிதா்களை சகோதர - சகோதரிகளாக நினைக்கும் மக்கள்தான் பெரும்பான்மையாக இருக்கிறோம். ஜனநாயகத்தில் இந்த வலிமைமிக்க சக்திகள் ஒன்று சோ்ந்து, மக்களும் ஆதரவாக இருக்கும்போது, எந்த பாசிச சக்தியாலும் ஒன்றும் செய்ய முடியாது.

உங்களுக்கு துணையாக திமுகவும், மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணியும் உறுதியாக இருக்கும். அதேபோல், என்றைக்கும் நீங்கள் எங்களுக்கு துணையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றாா் முதல்வா்.

விஜய், சீமான் பேச்சு அதிா்ச்சி அளிக்கிறது: தொல்.திருமாவளவன்

விண்ணில் பாய்ந்தது இஸ்ரோவின் பாகுபலி எல்விஎம்-3 எம்6 ராக்கெட்!

நினைத்தாலே அருளும் ஸ்ரீநிவாஸப் பெருமாள்!

விருச்சிக ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!

கணையப் புற்றுநோய் பாதிப்பை கண்டறிவது எப்படி?

SCROLL FOR NEXT