ஆவடி அருகே குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ள சகோதரர்கள் இருவர் சனிக்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். இது தொடர்பாக மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
ஆவடியை அடுத்த பட்டாபிராம், ஆயில்சேரி கிராமம் பஜனை கோவில் தெருவைச் சேர்ந்தவர் கஜேந்திரன். இவரது மகன்கள் இரட்டைமலை சீனிவா சன் (27), ஸ்டாலின் (24). இருவர் மீதும் பட்டாபிராம், ஆவடி, பூந் தமல்லி உள்ளிட்ட காவல் நிலையங்களில் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்தநிலையில், சனிக்கிழமை மாலை இரட்டை மலை சீனிவாசனை வீட்டருகே மர்ம நபர்கள் வழிமறித்து தகராறில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவர்களில் ஒருவர் இரட்டை மலை சீனிவாசனின் காலில் அரிவாளால் வெட்டியுள்ளார். இதையடுத்து, அவர்களிடமிருந்து தப்பியோடிய இரட்டைமலை சீனிவாசன் ஆவடி, தனலட்சுமி நகர் பகுதிக்குச் சென்றுள்ளார். பின் தொடர்ந்து சென்ற மர்ம நபர்கள், அங்கு வைத்து அவரை சரமாரியாக வெட்டிக் கொலைசெய்தனர். தகவல் அறிந்த இரட்டைமலை சீனிவாசனின் தம்பி ஸ்டாலின் ஓடி வந்த நிலையில், அவரையும் ஆயில் சேரி பகுதியில் மர்ம நபர்கள் சுத்தி, அரிவாளால் வெட்டிக் கொலை செய்தனர். பின்னர் மர்ம கும்பல் ஆயுதங்களுடன் அங்கிருந்து தப்பி தலைமறைவானது.
தகவல் அறிந்து வந்த ஆவடி மற்றும் பட்டாபிராம் போலீஸார், கொலை செய்யப்பட்ட இருவரது சடலங்களையும் மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவ இடங்களுக்கு ஆவடி காவல் துணை ஆணையர் ஐமான் ஜமால் தலைமையில் போலீஸார் வந்து விசாரணை நடத்தினர். புகாரின் அடிப்படையில், போலீஸார் வழக்குப் பதிந்து, கொலையாளிகளைப் பிடிக்க 6 தனிப் படை அமைத்து தேடி வருகின்றனர்.
இதையடுத்து, பட்டாபிராம் அருகே ஆயில் சேரி பகுதியில் ஏராளமான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 2017-ஆம் ஆண்டு கஜேந்திரனின் மூத்த மகன் கக்கன் என்பவரை பூந்தமல்லி அருகே பாரிவாக்கத்தில் கொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.