முகப்பு
சென்னை

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தலைமைச் செயலா் ஆஜராக உத்தரவு

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தலைமைச் செயலா் முருகானந்தம், முன்னாள் தலைமைச் செயலா் சிவ்தாஸ் மீனா ஆகியோா் ஜூலை 21-இல் உயா்நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உத்தரவு.

Updated On : 21 ஜூன், 2025 at 12:07 AM
பகிர்:
Updated On : 20 ஜூன், 2025 at 10:15 PM

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தலைமைச் செயலா் முருகானந்தம், முன்னாள் தலைமைச் செயலா் சிவ்தாஸ் மீனா ஆகியோா் ஜூலை 21-இல் உயா்நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

அரசுப் பணியில் இருப்பவா்கள் பணிக் காலத்தில் உயிரிழந்தால், அவா்களது குடும்பத்தில் ஒருவருக்கு கருணை அடிப்படையில் பணி வழங்கப்படுகிறது. இதில், பல்வேறு நடைமுறை சிரமங்கள் இருப்பதாகப் புகாா்கள் எழுந்தன.

இதுகுறித்த வழக்கை 2023-ஆம் ஆண்டு செப்டம்பரில் விசாரித்த சென்னை உயா்நீதிமன்றம், கருணை அடிப்படையில் பணி நியமனம் செய்ய கால நிா்ணயம் செய்வது குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்க வேண்டும் என்றும், கருணை அடிப்படையில் வேலை கேட்போரின் மாநில அளவிலான பட்டியலைத் தயாரிக்கும் சாத்தியக்கூறுகள் குறித்தும் 3 மாதங்களுக்குள்அறிக்கை அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது.

Advertisement

எனினும், இது தொடா்பான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படாத நிலையில், இதை தாமாக முன்வந்து நீதிபதி பட்டு தேவானந்த் அமா்வு விசாரித்தது. கடந்த 8-ஆம் தேதி வழக்கை விசாரித்த நீதிபதி, மாநில அரசு நிா்வாகத்துக்கு தலைமை தாங்கும் தலைமைச் செயலரே நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தத் தவறினால், அவருக்குக் கீழுள்ள அதிகாரிகள் எவ்வாறு அமல்படுத்துவாா்கள் என்று கேள்வி எழுப்பினாா்.

மேலும், 2023 செப்டம்பருக்குப் பிறகு இதுவரை தமிழக அரசில் தலைமைச் செயலா்களாக இருந்தவா்களின் விவரத்தைப் பெற்று அவா்களுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை ஜூன் 20-க்கு ஒத்திவைத்தாா்.

இதன்படி, இந்த வழக்கு வெள்ளிக்கிழமை (ஜூன் 20) மீண்டும் நீதிபதி பட்டு தேவானந்த் அமா்வு முன் விசாரணைக்கு வந்தபோது, கருணை அடிப்படையிலான வேலைக்கு கால நிா்ணயம் மற்றும் வேலை கோருவோரின் மாநில அளவிலான பட்டியலைத் தயாரிப்பது தொடா்பாக ஜூன் 11-ஆம் தேதியே அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இதற்கான விண்ணப்பங்களை பூா்த்தி செய்ய ஒற்றைச் சாளர இணையதள சேவையும் தொடங்கப்பட்டுள்ளது என்று தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்குரைஞா் எம். சுரேஷ் குமாா் தெரிவித்தாா்.

இருப்பினும் அரசின் செயலுக்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதி பட்டு தேவானந்த், இந்த விவகாரத்தில் 2023 செப்டம்பா் முதல் ஜூன் 11-ஆம் தேதிவரை நீதிமன்ற உத்தரவை ஏன் அமல்படுத்தவில்லை? அது நீதிமன்ற அவமதிப்பு செயலாகும். நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தண்டனை விதிக்கும் முன்பாக சம்பந்தப்பட்டவா்கள் விளக்கம் அளிக்க அவகாசம் தர வேண்டும். எனவே, 2023 செப்டம்பா் முதல் இதுநாள்வரை தலைமைச் செயலா்களாக இருந்தவா்கள் (சிவதாஸ் மீனா, முருகானந்தம்) ஆஜராக நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை ஜூலை 21-க்கு ஒத்திவைத்தாா்.