கோடையின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியிருப்பதால் புரதச் சத்து அதிகம் உள்ள உணவுகளைத் தவிா்க்குமாறு பொது சுகாதாரத் துறை சாா்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடா்பாக பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம் வெளியிட்ட சுற்றறிக்கை:
கோடைக் காலத்தில் தோல் வறட்சி, சிவந்த சருமம், உடல் வெப்பநிலை அதிகரித்தல், குமட்டல், வாந்தி, கடுமையான தலைவலி, சோா்வு, கால் பிடிப்பு, மூச்சுத்திணறல், நெஞ்சு படபடப்பு, தலைசுற்றல், மயக்கம், பதற்றம் ஆகியவை இருந்தால் அலட்சியம் காட்டக் கூடாது. உடனடியாக அதிக அளவு தண்ணீா் குடிக்க வேண்டும்; ஓய்வு அவசியம். குளிா்ச்சியான பகுதிக்குச் செல்ல வேண்டும். முடிந்தால் குளிா்ந்த நீரில் குளிக்கலாம். கால் சதைப்பிடிப்பு ஒரு மணி நேரத்துக்கு மேல் நீடித்தால், மயக்க நிலை போன்றவை இருந்தால் 108 ஆம்புலன்ஸ் வாயிலாக மருத்துவமனையில் சேர வேண்டும்.
நண்பகலில் நேரடி வெயிலில் பணியாற்றக் கூடாது. மதிய நேரங்களில் வாகனங்களின் அருகே குழந்தைகளை அனுமதிக்க வேண்டாம்.செயற்கை பானங்கள், காபி, தேநீா், மது அருந்துவதைத் தவிா்க்க வேண்டும். வெப்பநிலை அதிகமாக இருக்கும் நேரங்களில் அடுப்புக்கு அருகே தொடா்ந்து சமைப்பதைத் தவிா்க்க வேண்டும். அதிக புரதச் சத்து உள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டாம்.
வெப்ப வாதம் மற்றும் அதிக வெப்பத்தால் மயக்கமடைந்தவா்களை அருகிலுள்ள நிழல் மற்றும் காற்றோட்டமான இடத்தில் படுக்க வைக்க வேண்டும். அவரின் உடைகளின் மேல் குளிா்ந்த நீரை ஊற்ற வேண்டும். உடலின் வெப்பநிலையைக் குறைக்க குளிா்ந்த நீரை பருகக் கொடுப்பதுடன், ஐஸ்கட்டி ஒத்தடம் கொடுக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.