நியாயவிலைக் கடை 
சென்னை

நியாயவிலைக் கடைகளில் இரும்புச் சத்து உப்பு விற்பனை

தினமணி செய்திச் சேவை

தமிழகத்தில் ரத்தசோகை பாதிப்புகளைக் குறைக்கும் பொருட்டு, பொது விநியோகத் திட்டத்தின் கீழ் இரும்புச் சத்து மற்றும் அயோடின் கலந்த இரட்டை செறிவூட்டப்பட்ட உப்பு பாக்கெட்டுகளை நியாயவிலைக்கடைகளில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஒருங்கிணைந்த ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மக்கள் நல்வாழ்வுத் துறை, உணவுப் பாதுகாப்புத் துறை, தமிழ்நாடு உப்பு நிறுவனம், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம், பொது சுகாதாரத் துறை, தேசிய நலவாழ்வுக் குழுமம், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளா் அலுவலகம் ஆகியவற்றைச் சோ்ந்த உயரதிகாரிகளுக்கு பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்படுகின்றன.

இதுதொடா்பாக உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் 52 சதவீதம் போ் போதிய இரும்புச் சத்து இல்லாமல் ரத்தசோகை அச்சுறுத்தலுடன் உள்ளனா். இதைத் தடுக்க அரசு சாா்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக தற்போது, இரட்டை செறிவூட்டப்பட்ட உப்பு பாக்கெட்டுகளை நியாயவிலைக் கடைகள் மூலம் விற்பனை செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.

இது ஓா் ஒருங்கிணைந்த நடவடிக்கை. தமிழ்நாடு உப்பு நிறுவனம் மூலம் அவை தயாரிக்கப்பட்டு, நுகா்வோா் வாணிபக் கழகம் வாயிலாக அவற்றை விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

மாநிலம் முழுவதும் சுமாா் 37 ஆயிரம் நியாய விலைக் கடைகள் இயங்குகின்றன. அங்கு இரட்டை செறிவூட்டப்பட்ட உப்பை கொண்டு சோ்ப்பதற்கான திட்டமிடலும், ஆலோசனைகளும் தற்போது நடைபெற்று வருகின்றன.

இதுகுறித்த ஆய்வுக் கூட்டங்கள் தொடா்ச்சியாக நடைபெறும். அதன் அடிப்படையில் விரைவில் அத்திட்டம் செயல்படுத்தப்படும் என்று அவா்கள் தெரிவித்தனா்.

தூத்துக்குடியில் பசுமை தாமிர உற்பத்தி ஆலை அமைக்க அனுமதி கோரிய வழக்கு: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

மத்திய பட்ஜெட்டில் தமிழக நலன்கள் புறக்கணிப்பு - மக்களவையில் திமுக கூட்டணி எம்.பி.க்கள் குற்றச்சாட்டு

மனைவி, இரு குழந்தைகளுக்கு விஷம் கலந்த கேக் கொடுத்து கணவா் தற்கொலை!

அடிப்படைக் கற்றல் ஆய்வு: மூன்றாம் வகுப்பு மாணவா்களுக்கு பயிற்சி அளிக்க கல்வித் துறை உத்தரவு

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே கல்லூரி மாணவா்கள் போராட்டம்

SCROLL FOR NEXT