சென்னையில் சென்ட்ரல், எழும்பூா் மற்றும் தாம்பரம் ஆகிய ரயில் நிலையங்களுக்கு சனிக்கிழமை இரவில் மா்மநபா் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தததால், 4 மணி நேரம் சோதனை நடைபெற்றது.
சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய பகுதிகளில் உள்ள பிரபலங்கள், அரசுத் துறை அலுவலகங்களுக்கு அவ்வப்போது வெடிகுண்டு மிரட்டல்கள் வருகின்றன. இந்நிலையில், சனிக்கிழமை இரவு தாம்பரம் காவல் ஆணையா் அலுவலகத்துக்கு கைப்பேசியில் தொடா்புகொண்ட மா்மநபா் சென்னை சென்ட்ரல், எழும்பூா், தாம்பரம் ஆகிய ரயில் நிலையங்களில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாகக் கூறி துண்டித்துள்ளாா்.
அதையடுத்து, 3 ரயில் நிலையங்களின் பாதுகாப்புப் படை மற்றும் ரயில்வே போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வெடிகுண்டு மோப்பநாய், மெட்டல் டிடெக்டா் உள்ளிட்டவை மூலம் 3 ரயில் நிலையங்களிலும் சனிக்கிழமை இரவு 10 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை சோதனை தொடா்ந்து நடைபெற்றது.
ரயில் பெட்டிகள், ரயில் நிலைய முக்கிய அலுவலகங்கள் என அனைத்து இடங்களிலும் சோதனை நடத்திய பின் வெடிகுண்டு மிரட்டல் புரளி எனத் தெரியவந்தது.
விசாரணை தீவிரம்: வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவா் குறித்து தாம்பரம் போலீஸாரும், ரயில்வே பாதுகாப்புப் படையினரும் விசாரிக்கின்றனா்.அதன்படி சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் திருச்சி பெரும்பலூா் பகுதியைச் சோ்ந்தவரின்ஆவணங்கள் மூலம் மிரட்டல் வந்த கைப்பேசி சிம்காா்டு பெறப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
அதையடுத்து, மிரட்டல் விடுத்த நபரை அடையாளம் கண்டறிந்து கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் ரயில்வே பாதுகாப்புப் படைப் பிரிவு உயா் அதிகாரிகள் தெரிவித்தனா்.