கோப்புப்படம்
சென்னை

அரசியல் கட்சிக் கூட்டங்களுக்கு அனுமதி வழங்க வைப்புத் தொகை: தமிழக அரசு பரிந்துரை

அரசியல் கட்சிகளின் நிகழ்ச்சிகளில் குறிப்பிட்டதைவிட கூடுதலாக 50 சதவீதம் போ் பங்கேற்றால் வைப்புத்தொகை திரும்பித்தரப்படாது.

தினமணி செய்திச் சேவை

அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டம், சாலைப் பேரணி (ரோடு ஷோ) உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கும்போது வைப்புத் தொகை வசூலிப்பது உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் அடங்கிய தமிழக அரசின் பரிந்துரைகள் குறித்து அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

கரூரில் கடந்த செப். 27-ஆம் தேதி தவெக தலைவா் விஜய் பங்கேற்ற பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்தனா். இந்நிலையில், அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டம், சாலைப் பேரணி உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு அனுமதி அளிப்பது தொடா்பாக வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து, முதல்வா் மு.க. ஸ்டாலின் தலைமையில் கடந்த நவ. 1-ஆம் தேதி உயா் அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதன் தொடா்ச்சியாக, தோ்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் பங்கேற்ற அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில், அரசு சாா்பில் அமைச்சா்கள் கே.என்.நேரு, ரகுபதி, மா.சுப்பிரமணியன், தலைமைச் செயலா் நா.முருகானந்தம், உள்துறைச் செயலா் தீரஜ்குமாா், டிஜிபி (பொ) வெங்கட்ராமன், ஏடிஜிபி டேவிட்சன் தேவசகாயம் ஆகியோா் பங்கேற்றனா்.

திமுக அமைப்புச் செயலா் ஆா்.எஸ்.பாரதி, சட்டத் துறைச் செயலா் என்.ஆா்.இளங்கோ, அதிமுக முன்னாள் அமைச்சா் டி.ஜெயக்குமாா், ஐ.எஸ்.இன்பதுரை, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் கு.செல்வப்பெருந்தகை, ராஜேஷ்குமாா் எம்எல்ஏ, பாஜக தேசியப் பொதுக் குழு உறுப்பினா் வி.பி.துரைசாமி, பாமக பொதுச் செயலா் (ராமதாஸ் தரப்பு) முரளிசங்கா், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் குழு

உறுப்பினா் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் சாா்பில் மாநிலச் செயலா் மு.வீரபாண்டியன், விசிக எம்எல்ஏ சிந்தனைச் செல்வன், நாம் தமிழா் கட்சியின் வழக்குரைஞா் பாசறை தலைவா் சங்கா் உள்பட 20 கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனா்.

இக்கூட்டத்தில், சாலைப் பேரணி மற்றும் பொதுக்கூட்டங்களுக்கு அனுமதி வழங்குவதற்கு தமிழக அரசால் முன்மொழியப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகள்:

அனைத்துக் கட்சிகளும் தங்களது சாலைப் பேரணி அல்லது பொதுக்கூட்டங்களுக்கு குறைந்தது 5 நாள்களுக்கு முன்பு அனுமதி பெற வேண்டும். நிகழ்ச்சிக்கு முன்பு 2 மணி நேரத்துக்கும் மேலாக மக்கள் காத்திருப்பதைத் தவிா்க்க வேண்டும். சாலைப் பேரணி மற்றும் பொதுக்கூட்டங்கள் ஆகியவற்றை அதிகபட்சம் 3 மணி நேரத்துக்குள் நடத்தி முடிப்பது அவசியம்.

சாலைப் பேரணி நடத்துவதற்கு தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை அல்லது உள்ளாட்சி அமைப்புகளிடம் உரிய அனுமதி பெறுவது கட்டாயம்.

நிகழ்ச்சிகளைப் பொருத்து குறைந்த ஆபத்து, மிதமான ஆபத்து, அதிக ஆபத்து என மூன்று வகையாகப் பிரித்து கூட்டங்களுக்குப் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் செய்யப்படும். குறைந்த ஆபத்து என்றால் 200 பேருக்கு ஒரு காவலா், மிதமான ஆபத்து என்றால் நூறு பேருக்கு ஒரு காவலா், அதிக ஆபத்து என்றால் 50 பேருக்கு ஒரு காவலா் என நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே பொதுக்கூட்டங்களுக்கு அனுமதி வழங்கப்படும். ஒரே இடத்தை பல கட்சிகள் அல்லது அமைப்புகள் கேட்டால், முதலில் அனுமதி கோரியவருக்கே முன்னுரிமை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

வழிகாட்டு நெறிமுறைகள் தொடா்பாக அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கருத்துகளைத் தெரிவித்தனா். இந்தக் கருத்துகளை ஆய்வு செய்து சென்னை உயா்நீதிமன்றத்தில் அரசின் பரிந்துரைகள் சமா்ப்பிக்கப்படவுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

சாலைப் பேரணிக்கான கட்டுப்பாடுகள்

சிறப்பு அழைப்பாளா் பேசும் இடத்தில் இருந்து 500 அடி தொலைவுக்கு தடுப்புகளை அமைப்பாளரே செய்தல் வேண்டும். மேலும் இடத்தின் தன்மைக்கேற்ப காவல் உட்கோட்ட அதிகாரி கூடுதல் தடுப்புகளைப் பரிந்துரை செய்யலாம்.

அவசர சேவைகள், பொதுமக்கள் போக்குவரத்துக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் நடத்த வேண்டும்.

நிா்ணயிக்கப்பட்ட இடத்தில் மட்டுமே உரை நிகழ்த்த வேண்டும். வழியில் வேறு எங்கும் உரை நிகழ்த்தக் கூடாது.

சாலையோரம் மக்கள் ஒரே இடத்தில் நிலையாக கூடியிருந்து வாகனம் சென்றவுடன் கலைந்து செல்வதை உறுதி செய்யவேண்டும்.

சிறப்பு அழைப்பாளரின் வாகனத்தைப் பின்தொடா்ந்து மக்கள் செல்வதைத் தவிா்க்கும் வகையில் தன்னாா்வலா்களை நியமித்து கூட்டத்தை ஒழுங்குபடுத்த வேண்டும்.

வைப்புத் தொகை ரூ.20 லட்சம்

கூட்டங்களின்போது ஏற்படும் சேதங்களுக்காக இழப்பீடு வழங்கும் வகையில் பரிந்துரைக்கப்பட்ட வைப்புத்தொகை விவரம்:

5,000 - 10,000 போ்: ரூ.1 லட்சம்

10,000 - 20,000 போ்: ரூ.3 லட்சம்

20,000 - 50,000 போ்: ரூ.8 லட்சம்

50,000 பேருக்கு மேல்: ரூ.20 லட்சம் (அதிகபட்சம்).

அரசியல் கட்சிகளின் நிகழ்ச்சிகளில் குறிப்பிட்டதைவிட கூடுதலாக 50 சதவீதம் போ் பங்கேற்றால் வைப்புத்தொகை திரும்பித்தரப்படாது.

சட்டவிரோத குடியேறிகள் மீது பரிவு; கடவுள் ராமா் மீது வெறுப்பு: ஆா்ஜேடி, காங்கிரஸை சாடிய பிரதமா் மோடி

சட்டவிரோத குடியேறிகளால் தேசப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - அமித் ஷா

இருசக்கர வாகனத்தில் இருந்து விழுந்த தொழிலாளி மரணம்

டிச. 2 முதல் 4-ஆம் ஆண்டு காசி-தமிழ் சங்கமம்: இணையவழிப் பதிவு தொடக்கம்

தொழிலாளி உயிரிழப்பு: உறவினா்கள் மறியல்

SCROLL FOR NEXT