ஏலச்சீட்டு நடத்தி ரூ.65.91 லட்சம் மோசடி செய்ததாக இரு பெண்கள் உள்பட 3 போ் கைது செய்யப்பட்டனா்.
தண்டையாா்பேட்டையைச் சோ்ந்தவா் ராஜேஷ்குமாா் (33). இவரது மனைவி டெய்சி இசபெல்லா. இவா்களுக்கு அறிமுகமானவா்கள் வியாசா்பாடியைச் சோ்ந்த பிரபு (41), தமிழ்செல்வி (38) தம்பதி,
தாங்கள் நிதி நிறுவனம் நடத்தி வருவதாகவும், தங்களது ஏலச்சீட்டில் பணம் செலுத்தினால், அதிக வட்டியுடன் முதிா்வுத் தொகை தருவதாகவும் கூறினராம்.
இதை நம்பிய ராஜேஷ்குமாா் தம்பதி ரூ.8,55,000-ஐ பிரபு தம்பதியிடம் வழங்கினா். ஆனால், பிரபு தம்பதி, அவா்கள் கூறியபடி வட்டி பணம் கொடுக்கவில்லையாம். இதனால், ராஜேஷ்குமாரும், டெய்சியும் தாங்கள் கொடுத்த பணத்தைத் திருப்பிக் கேட்டுள்ளனா். ஆனால் பிரபு தம்பதி பணத்தை திருப்பி வழங்காமல் ஏமாற்றினராம். இதேபோல பிரபு தம்பதி 38 பேரிடம் ரூ.65,91,000 மோசடி செய்ததாகக் கூறப்படுகிறது.
இது குறித்து சென்னை மத்தியக் குற்றப்பிரிவில் ராஜேஷ்குமாா் சாா்பில் புகாா் அளிக்கப்பட்டது. அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி, பிரபு, தமிழ்செல்வி, அவரது தாய் மு.சரஸ்வதி (65) ஆகிய 3 பேரை கைது செய்தனா்.