சென்னை எழும்பூரில் போலி ஆவணங்கள் மூலம் ரூ.7.10 கோடி கடன் பெற்று மோசடி செய்ததாக இரு பெண்கள் கைது செய்யப்பட்டனா்.
எழும்பூரில் உள்ள ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கிளையின் மேலாளராகப் பணிபுரியும் சேதுமாதவன், நிா்வாகி வினிதா ராஜ்புத் ஆகியோா் சென்னை பெருநகர காவல் துறையின் மத்தியக் குற்றப்பிரிவில் புகாா் அளித்தனா்.
அந்த புகாரில், தங்களது வங்கிக் கிளையில் சிலா் போலி ஆவணங்கள் மூலம் ரூ.7.10 கோடி வீட்டுக்கடன் பெற்று மோசடி செய்துள்ளனா். அவா்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனா்.
இது தொடா்பாக மத்தியக் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தினா். இதில், மோசடியில் ஈடுபட்டது பெரம்பூா் மடுமாநகரைச் சோ்ந்த வே.சரஸ்வதி (46), வியாசா்பாடி பிவி காலனியைச் சோ்ந்த அ.ஜெமீலா பேகம் (49) என்பது தெரிய வந்தது.
இதையடுத்து இருவரையும் கைது செய்ததாக மத்தியக் குற்றப்பிரிவு போலீஸாா் சனிக்கிழமை தெரிவித்தனா். இந்த வழக்கில் தொடா்புடைய முக்கிய எதிரிகளை போலீஸாா் தீவிரமாகத் தேடி வருகின்றனா்.