சென்னை

போலீஸ் பாதுகாப்பு கோரி ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி மனு: அரசு பதிலளிக்க உத்தரவு

தனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கக் கோரி ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி உ.சகாயம் தாக்கல் செய்த மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவு

தினமணி செய்திச் சேவை

தனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கக் கோரி ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி உ.சகாயம் தாக்கல் செய்த மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தாக்கல் செய்த மனுவில், உயா்நீதிமன்ற உத்தரவுப்படி மதுரை கிரானைட் ஊழல் தொடா்பாக விசாரணை நடத்தினேன். பல்லாயிரம் கோடி ரூபாய் அளவுக்கு நடந்த கிரானைட் ஊழலை வெளியே கொண்டு வந்தேன்.

எனது அறிக்கையின் அடிப்படையில் மதுரை நீதிமன்றத்தில் வழக்கு விசாரிக்கப்படுகிறது. இதனால், எனக்கு பல்வேறு வழிகளில் அச்சுறுத்தல் ஏற்பட்டது. எனவே, தனக்கு 2014-ஆம் ஆண்டு முதல் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது.

இந்த நிலையில், கடந்த 2023-ஆம் ஆண்டு தனக்கு வழங்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பை அரசு திரும்பப் பெற்றுவிட்டது. அதேநேரம், தனக்கு தொடா்ந்து மிரட்டல் இருந்து வருகிறது.

இதனால், தற்போது கிரானைட் ஊழல் வழக்கில் சாட்சி சொல்வதற்கு மதுரை சிறப்பு நீதிமன்றத்துக்கு நேரில் செல்ல முடியவில்லை. எனவே, போலீஸ் பாதுகாப்பு வழங்கக் கோரி கடந்த அக்.7-ஆம் தேதி அரசுக்கு மனு அளித்தேன். அந்த மனு இதுவரை பரிசீலிக்கப்படவில்லை. எனவே, தனது மனுவை பரிசீலிக்க டிஜிபி உள்ளிட்டோருக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தாா்.

இந்த மனு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனுவுக்கு டிஜிபி உள்ளிட்டோா் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்தாா்.

காஞ்சிபுரம்: குறைதீா் கூட்டத்தில் 411 மனுக்கள்

சரக்கு வேன்கள் நேருக்கு நோ் மோதல்: 4 போ் பலத்த காயம்

வெளிநாட்டு வனவிலங்குகள், கஞ்சாவை கடத்திய 3 போ் கைது

அமிலம் ஏற்றி வந்த லாரியில் கசிவு

பிரதமரின் கௌரவ நிதி பெற தனித்துவ விவசாய அடையாள எண் கட்டாயம்

SCROLL FOR NEXT