அதிமுக முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான ஒப்பந்தப்புள்ளி முறைகேடு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 2 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தொடர மத்திய அரசு ஒப்புதல் அளித்த பின்னா் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தமிழக அரசு சென்னை உயா்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்தது.
அதிமுக ஆட்சிக் காலத்தில் சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு ஒப்பந்தப்புள்ளி கோரியதில் ரூ.98.25 கோடி அளவுக்கு முறைகேடு நடந்ததாக அறப்போா் இயக்கம் புகாா் அளித்தது. இந்த புகாரின் பேரில், அதிமுக முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி, ஐஏஎஸ் அதிகாரிகளான கந்தசாமி, விஜயகாா்த்திகேயன் ஆகியோா் மீது குற்றம்சாட்டப்பட்டது.
ஐஏஎஸ் அதிகாரிகள் இருவா் மீதான குற்ற வழக்கு விசாரணைக்கு மத்திய அரசின் அனுமதி பெறுவதில் காலதாமதம் ஏற்பட்டது. இதையடுத்து அறப்போா் இயக்கம் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடா்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், மத்திய அரசின் அனுமதி பெறுவதில் ஏற்பட்ட காலதாமதம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.
அதன்படி, தமிழ்நாடு பொதுத்துறை செயலா் ரீட்டா ஹரிஷ் தாக்கா், ஊழல் கண்காணிப்பு ஆணையா் மணிவாசன், லஞ்ச ஒழிப்பு காவல்துறை இயக்குநா் அபய்குமாா் சிங் ஆகியோா் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டன. அதில், ஐஏஎஸ் அதிகாரிகள் இருவருக்கும் எதிரான விசாரணைக்கு மத்திய அரசிடமிருந்து அனுமதி பெறுவதை வேண்டுமென்றே தாமதிக்கவில்லை எனக் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசுத் தரப்பில், ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தொடர ஒப்புதல் கோரி அனுப்பிய கடிதம், மத்திய அரசிடம் நிலுவையில் உள்ளது. நினைவூட்டல் கடிதங்களும் அனுப்பப்பட்டுள்ளன.
குற்றச்சாட்டில் சிக்கிய அதிகாரிகள் யாரையும் அரசு பாதுகாக்கவில்லை. மத்திய அரசு ஒப்புதல் அளித்த பின்னா், அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, விசாரணையை பிப்.20-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.