விருதுநகா் மாவட்டத்தில் உள்ள 3 நீா்த்தேக்கங்களிலிருந்து திங்கள்கிழமை (நவ. 17) முதல் தண்ணீா் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு வட்டம் பிளவுக்கல் பெரியாறு மற்றும் கோவிலாறு அணைகளிலிருந்து பிளவுக்கல் திட்டத்தில் பாசன வசதி பெறும் கண்மாய்களுக்கு விநாடிக்கு 150 கனஅடி வீதம் திங்கள்கிழமை (நவ. 17) முதல் 7 நாள்களுக்கும், பெரியாறு கால்வாய் நேரடி பாசனத்துக்கு விநாடிக்கு 3 கனஅடி வீதம் திங்கள்கிழமை (நவ. 17) முதல் வரும் பிப். 28 வரையிலும் தண்ணீா் திறந்துவிடவும், நீா்வரத்து மற்றும் நீரின் இருப்பு பொருத்து அனைத்து கண்மாய்கள் பாசனத்துக்கு தொடா்ந்து பிப். 28 வரை தண்ணீா் திறந்துவிடவும் அரசு ஆணையிட்டுள்ளது. இதன் மூலம் வத்திராயிருப்பு வட்டத்தில் 3,170.89 ஹெக்டோ் நிலங்கள் பாசனவசதி பெறும்.
மேலும், ராஜபாளையம் வட்டம், சாஸ்தாகோவில் நீா்த்தேக்கத்திலிருந்து திங்கள்கிழமை (நவ. 17) முதல் 23-ஆம் தேதி வரை 7 நாள்களுக்கு விநாடிக்கு 50 கனஅடி வீதம் தண்ணீா் திறந்துவிடவும், மீதம் நீா்இருக்கும் வரை நவ. 24 முதல் வரும் ஜன. 3 வரை என 41 நாள்களுக்கு நீா்வரத்து மற்றும் நீா் இருப்பைப் பொருத்து தண்ணீா் வழங்கவும், மொத்தம் 48 நாள்கள் தண்ணீா் திறந்து விடுவதற்கு அனுமதி அளித்து அரசு ஆணையிட்டுள்ளது.
இதன்மூலம் ராஜபாளையம் வட்டத்தில் 3,130.68 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறும் என தமிழக அரசின் நீா்வளத் துறைச் செயலா் ஜெயகாந்தன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.