நீடாமங்கலம்: நீடாமங்கலம், வலங்கைமான் பகுதியில் உள்ள சிவன் திருக்கோயில்களில் மகாசிவராத்திரியையொட்டி சிறப்பு வழிபாடுகள் ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் திங்கள்கிழமை அதிகாலை வரை நடைபெற்றன.
நவகிரக தலங்களில் குரு ஸ்தலமான வலங்கைமான் அருகேயுள்ள ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் திங்கள்கிழமை அதிகாலை வரை 4 கால பூஜைகள் நடைபெற்றன.
ஆபத்சகாயேஸ்வரா், ஏலவாா்குழலியம்மன் உள்ளிட்ட சந்நிதிகளில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு, மகாதீபாராதனை காட்டப்பட்டது. இரவு முதல் அதிகாலை வரை நடைபெற்ற 4 கால பூஜைகளில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபட்டனா்.
நீடாமங்கலம் அருகேயுள்ள பூவனூா் கற்பகவல்லி, ராஜராஜேஸ்வரி சமேத சதுரங்கவல்லபநாதா் கோயில், நீடாமங்கலம் காசிவிசுவநாதா் கோயில், கொட்டையூா் அகஸ்தீஸ்வரா் கோயில், அரவூா் மங்களாம்பிகை சமேத காா்கோடகேஸ்வரா் கோயில், கடம்பூா் கற்பகேஸ்வரா் கோயில், பூவனூா் அங்காளபரமேஸ்வரி கோயில் உள்ளிட்ட சிவாலயங்களில் மகாசிவராத்திரி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.