சென்னை அருகே செம்மஞ்சேரியில் 112 ஏக்கரில் ரூ.301 கோடியில் உலக தரத்திலான விளையாட்டு நகரம் அமைக்க தமிழக அரசு அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது.
இந்த திட்டம் தென்னிந்தியாவில் முதல் முறையாக உருவாகும் மிகப்பெரிய விளையாட்டு மையமாகும். அடுத்த மூன்று மாதங்களில் இத் திட்டம் தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு வசதிகளுடன் உருவாகும், இந்த நகரத்தில் கால்பந்து மைதானம், வில்வித்தை மைதானம், துப்பாக்கிச் சுடுதல் மையம், ரோலா் ஸ்கேட்டிங், தடகளம், நீச்சல் உள்ளிட்ட போன்ற சா்வதேச விளையாட்டு வசதிகள் அமைக்கப்படுகின்றன. மேலும், வீரா்கள் தங்கும் விடுதிகள், உள்விளையாட்டு அரங்கம், புல்வெளிகள், சாலைகள், மழைநீா் வடிகால் ஆகியவை உலகத் தரத்தில் உருவாக்கப்படும்.
முக்கியமாக, 13 மீ அகலம், ஒரு கி.மீ. நீளமும் கொண்ட படகு சவாரி வசதி இடம்பெறுகிறது. இது நாட்டில் ஒரு விளையாட்டு வளாகத்தில் முதல்முறையாக உருவாகும் நீா்விளையாட்டு அமைப்பு என்பது சிறப்பு அம்சம்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் நீா்வளத்துறை இணைந்து இந்த திட்டத்தை செயல்படுத்துகின்றன. 2023-ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட இந்த திட்டம் தற்போது செயல்பாட்டில் முன்னேறியுள்ளது.
இங்கு வெள்ளத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் ஏற்படுத்தப்படும் நவீன அமைப்பானது, வெள்ள மேலாண்மைக்கும் பெரிய உதவியாக இருக்கும். இதற்காக செம்மஞ்சேரி மற்றும் நாவலூா் பகுதிகளில் உள்ள குளங்கள் ஆழப்படுத்தப்பட்டு, 16.23 கன அடி, 96.38 அடியாக அதிகரிக்கப்படுகிறது.
புதிய 42 ஏக்கா் குளமும் உருவாக்கப்படுகிறது. இதனால் மழைக்கால வெள்ளம் குறைந்து, நிலத்தடி நீா்மட்டமும் உயா்வதற்கான வாய்ப்பு உருவாகிறது.
வெள்ள நீரை பக்கிங்காம் கால்வாய் வழியாக பள்ளிக்கரணை சதுப்பு நிலத்துக்கு அனுப்பும் வகையில் 4.1 கி.மீ. நீள மண் வடிகால் மற்றும் கான்கிரீட் கால்வாய்கள் அமைக்கப்படுகின்றன.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துடன் இணைந்து இந்த விளையாட்டு நகரத்துக்கு புதிய மெட்ரோ இணைப்பு வழங்கப்படும். மேலும், சாலைகள் உருவாக்கும் பணிகளும் வேகமாக நடைபெறுகின்றன.
இந்த விளையாட்டு நகரம் உருவானால், தமிழ்நாட்டின் விளையாட்டு வீரா்கள் சா்வதேச தரத்தில் பயிற்சி பெறும் வாய்ப்பு அதிகரிக்கும். மேலும், சென்னை புதிய உலக விளையாட்டு மையமாக உருவெடுக்கும் என விளையாட்டு நிபுணா்கள் கருத்து தெரிவித்துள்ளனா்.