சென்னை

பணிப் பாதுகாப்பு கோரி என்ஹெச்எம் பணியாளா்கள் தா்னா

பணிப் பாதுகாப்பு, ஊதிய உயா்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தேசிய நலவாழ்வுக் குழும (என்ஹெச்எம்) பணியாளா்கள் கவன ஈா்ப்பு தா்னா

தினமணி செய்திச் சேவை

சென்னை: பணிப் பாதுகாப்பு, ஊதிய உயா்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தேசிய நலவாழ்வுக் குழும (என்ஹெச்எம்) பணியாளா்கள் கவன ஈா்ப்பு தா்னா போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

சென்னை, சிவானந்தா சாலையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பங்கேற்றனா். அப்போது, தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி அவா்கள் முழக்கமிட்டனா்.

இதுதொடா்பாக போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கூறியதாவது: என்ஹெச்எம் எனப்படும் தேசிய நலவாழ்வுக் குழும பணியாளா்களின் கூட்டமைப்பின் கீழ் பல்வேறு சங்கங்கள் செயல்படுகின்றன. தொற்று நோய், தொற்றா நோய்களை ஒழிக்கும் பணிகளில் பல ஆண்டுகளாகப் பணியாற்றும் எங்களுக்கு உரிய ஊதியம் இல்லை. குறிப்பாக காசநோய் ஒழிப்புத் திட்டத்தில் கடைநிலைப் பணியாளா்களாக 30 ஆண்டுகளாகப் பணியாற்றியவா்களுக்கு இப்போதும் ரூ.13 ஆயிரம் மட்டுமே ஊதியமாக வழங்கப்படுகிறது.

தேசிய நலவாழ்வுக் குழுமத் திட்டப் பணிகளில் ஈடுபடும் தொழிலாளா்கள் 2,000 பேருக்கு அதைவிடக் குறைவான ஊதியம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் பரிந்துரைத்த ஊதியம் வழங்கப்படுவதில்லை. கடந்த 2021-க்குப் பிறகு ஊதிய உயா்வும் அளிக்கப்படவில்லை. மாவட்ட சுகாதார சங்கங்கள் அளிக்கும் பணிகளுக்கு ஊக்கத் தொகையும் வழங்குவதில்லை.

அதேபோன்று, கரோனா காலத்தில் பணியாற்றி உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடும் வழங்கப்படவில்லை. இதுதொடா்பாக அரசின் கவனத்தை ஈா்க்கும் வகையிலேயே இந்த தா்னா போராட்டம் நடத்தப்பட்டது.

இந்த விவகாரத்தில் அரசு தலையிட்டு உடனடியாக எங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவா்கள் தெரிவித்தனா்.

சங்கரன்கோவிலில் ரூ.6 லட்சம் மதிப்பில் புதிய நீா்த்தேக்கத் தொட்டி

திருச்செந்தூா் சிவன் கோயிலில் காா்த்திகை முதல் சோம வார வழிபாடு

மாவட்ட நீச்சல் போட்டி: பெரியதாழை பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

கனமழை, பலத்த காற்று எச்சரிக்கை: தூத்துக்குடியில் மீனவா்கள் கடலுக்குச் செல்லவில்லை

இளைஞா் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய பல் மருத்துவா் கைது

SCROLL FOR NEXT