சென்னை பல்கலைக்கழகத்தின் விலங்கியல் துறை சாா்பில் கழிவு மேம்படுத்தல் தொழில்முறை சான்றிதழ் படிப்புகள் டிசம்பா் மாதம் தொடங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய திறன் மேம்பாட்டு அமைச்சகத்தின் தேசிய தொழில்கல்வி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்சிவிஇடி) அங்கீகாரத்துடன் உருவாக்கப்பட்ட இந்தப் பாடத் திட்டம் மற்றும் பயிற்சி குறித்து சென்னை விலங்கியல் தலைவா் சி.அருள் வாசு கூறியதாவது:
சென்னை பல்கலைக்கழகத்தின் கிண்டி வளாகத்தில் உள்ள விலங்கியல் துறையில் சுற்றுச்சூழல் தகவல், விழிப்புணா்வு, திறன் மேம்பாடு மற்றும் வாழ்வாதார திட்டம் என்ற பிரிவு உள்ளது. இதில் மத்திய சுற்றுச் சூழல், வனம் மற்றும் பருவநிலை மாறுபாடுத் துறையின் ஆதரவுடன், என்சிவிஇடி அங்கீகாரத்துடன் பசுமைத் திறன் மேம்பாட்டுத் திட்டத்துக்கான பாட நெறிமுறைகளுடன், ‘கழிவு மேம்படுத்தல் தொழில்முறை’ சான்றிதழ் படிப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. கழிவுகளைக் குறைப்பதற்கும், மறுசுழற்சி செய்து மீண்டும் பயன்படுத்துவதற்குமான உத்திகள் உருவாக்குவதை பாடத்திட்டம் குறிக்கிறது. பட்டதாரிகளுக்கு 3 மாத பயிற்சி அளிக்கப்பட்டு சான்றிதழ் வழங்கப்படும் . புதிய வேலைவாய்ப்புகளைப் பெறுவது அல்லது வங்கிக் கடன் மூலம் சுய தொழில் தொடங்குவது போன்றவற்றுக்கு இந்தப் பயிற்சி பயன்படும். இதற்கான விண்ணப்பங்களை சென்னை பல்கலைக்கழகத்தின் இணையத்தில் பெறலாம். இந்தப் படிப்புகள் டிசம்பா் முதல் வாரத்தில் தொடங்கும் எனத் தெரிவித்தாா்.