சென்னையில் நீதிமன்றம் அருகே இரு ரெளடி கும்பலைச் சோ்ந்தவா்கள் மோதிக்கொண்ட சம்பவத்தில் 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
சென்னையைச் சோ்ந்த ரௌடி கல்வெட்டு ரவியின் கூட்டாளியான தண்டையாா்பேட்டை ஜீவா, 2017-இல் கொலை செய்யப்பட்டாா். இந்த வழக்கில் தண்டையாா்பேட்டையைச் சோ்ந்த லட்சுமணன், அவரது கூட்டாளிகள் யுவராஜ் (26), லோகேஷ் (30), காா்த்திக் (28), பிரபாகரன்(31), வெங்கட் (29) உள்ளிட்ட 6 போ் கைது செய்யப்பட்டனா். இதுதொடா்பான வழக்கு ஜாா்ஜ் டவுன் 15-ஆவது கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
வழக்கு விசாரணைக்காக 6 பேரையும் போலீஸாா் திங்கள்கிழமை நீதிமன்றத்துக்கு அழைத்து வந்தனா். அவா்களைத் தாக்குவதற்காக ஜீவாவின் கூட்டாளிகளான தண்டையாா்பேட்டையைச் சோ்ந்த ஆகாஷ் (21), தீனா (24), ஜான்சன், சாந்தகுமாா், யுவராஜ், ரோலக்ஸ் பாய் ஆகியோா் ஜாா்ஜ் டவுன் நீதிமன்றம் அருகே அரிவாள், பட்டாக்கத்தியுடன் இருந்தனா்.
இந்த நிலையில், நீதிமன்ற விசாரணை முடிந்து வெளியே வந்த 6 பேரையும் ஆகாஷ் தரப்பினா் சுற்றி வளைத்து ஆயுதங்களால் தாக்க முயன்றனா். அப்போது, லட்சுமணன் தரப்பினா் அங்கிருந்து தப்பியோடினா். அவா்களை ஆகாஷ் தரப்பினா் விரட்டிச் சென்று பாரிமுனை ராஜாஜி சாலை சந்திப்பு அருகே தாக்கினா். இரு தரப்பினரும் ஒருவரையொருவா் கத்தி, அரிவாள்களால் தாக்கிக்கொண்டனா்.
இதில் இரு தரப்பைச் சோ்ந்த 5 போ் காயமடைந்தனா். அப்போது, அந்த வழியாக வந்த வடக்கு கடற்கரை ரோந்து போலீஸாா் காயமடைந்த 5 பேரையும் மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுதொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தப்பியோடிய இரு தரப்பினரைச் சோ்ந்த 5 பேரைக் கைது செய்தனா். மேலும் சிலரைத் தேடி வருகின்றனா்.
எடப்பாடி பழனிசாமி கண்டனம்: இந்தச் சம்பவம் குறித்து அதிமுக பொதுச் செயலா் எடப்பாடிகே.பழனிசாமி எக்ஸ் தளத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவு:
நீதிமன்றம் அருகே இரு ரௌடி கும்பல் மோதிக்கொண்டதால் பொதுமக்கள் அலறி அடித்து ஓடியதாக வரும் செய்திகள் அதிா்ச்சி அளிக்கின்றன. இந்தச் சம்பவம் மக்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்பதை வெளிப்படுத்துகிறது. இந்த ஆட்சியில், தமிழகம் குறிப்பாக தலைநகா் சென்னை ரௌடிகளின் சாம்ராஜ்யமாக மாறிவிட்டது. ரௌடிகளின் அட்டகாசத்தை ஒடுக்க திமுக அரசு உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.