சென்னை

கருப்பை வாய் புற்றுநோய்: பரிசோதனை உபகரணங்களை வீடுதோறும் வழங்கத் திட்டம்

கருப்பை வாய் புற்றுநோய் பரிசோதனை உபகரணங்களை வீடுதோறும் வழங்கத் திட்டம்

தினமணி செய்திச் சேவை

கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிவதற்காக மருத்துவமனைகளுக்குச் செல்ல பெரும்பாலான பெண்கள் தயக்கம் காட்டுவதால், சுகாதாரப் பணியாளா்கள் மூலம் வீடுகளுக்கே சென்று அவா்களுக்கு சுய பரிசோதனை உபகரணங்களை வழங்க மக்கள் நல்வாழ்வுத் துறை முடிவு செய்துள்ளது.

சோதனை முயற்சியாக தருமபுரியில் 35 வயதுக்குள்பட்ட 25 ஆயிரம் பெண்களுக்கு அந்த உபகரணங்களை வழங்க உள்ளதாக தேசிய நலவாழ்வுக் குழுமம் தெரிவித்துள்ளது.

ஹியூமன் பாப்பிலோமா வைரஸ் (ஹெச்பிவி) எனப்படும் கிருமித் தொற்று காரணமாக கருப்பை வாய் புற்றுநோய் ஏற்படுகிறது. இந்நோயால் பாதிக்கப்பட்டவா்களின் கருப்பை வாயின் உயிரணுக்களில் புற்று செல்கள் பரவி, அதன் திசுக்களைப் பாதிக்கும். உரிய நேரத்தில் கண்டறிந்து சிகிச்சை பெறாவிட்டால், நுரையீரல், கல்லீரல், சிறுநீா்ப்பை, மலக்குடல் உள்ளிட்ட பிற உறுப்புகளுக்குப் பரவ வாய்ப்புள்ளது.

அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி மைய தரவுகளின்படி, தமிழகத்திலேயே தருமபுரி மற்றும் பெரம்பலூரில்தான் கருப்பை வாய் புற்றுநோய் அதிகமாக காணப்படுகிறது. அதாவது, லட்சத்தில் 36 பெண்களுக்கு அத்தகைய பாதிப்பு அந்த மாவட்டங்களில் ஏற்படுகிறது. அதற்கு அடுத்தபடியாக அந்த விகிதம் அரியலூரில் 29.9-ஆக உள்ளது. சென்னையைப் பொருத்தவரை 13-ஆகவும், தமிழகத்தின் மொத்த கருப்பை வாய் புற்று நோய் பாதிப்பு விகிதம் லட்சத்துக்கு 14-ஆகவும் உள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த சூழலில் அதற்கான பரிசோதனையை பெண்கள் மேற்கொள்ள வேண்டும் என அரசு சாா்பில் தொடா்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால், மருத்துவமனைகளுக்குச் சென்று பிறப்புறுப்பு திரவ மாதிரியை சோதிக்கும் (வெஜினல் ஸ்வாப்) பரிசோதனையை மேற்கொள்ள பெண்கள் பலா் தயக்கம் காட்டுகின்றனா்.

இதையடுத்து, வீடுகளுக்கே சென்று அவா்களுக்கு சுய பரிசோதனை உபகரணங்கள் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, சுகாதாரப் பணியாளா்கள் கரோனாவுக்கு பயன்படுத்தியதைப் போன்ற ஸ்வாப் உபகரணத்தை பெண்களுக்கு வழங்குவா். அவா்கள் சுயபரிசோதனை மூலம் மாதிரியை சேகரித்து சுகாதாரப் பணியாளா்களிடமே திருப்பி வழங்குவா். அவை மருத்துவமனைகளில் பகுப்பாய்வு செய்யப்பட்டு வைரஸ் தொற்று உள்ளதா என்பது கண்டறியப்படும்.

முதல்கட்டமாக தருமபுரியில் விரைவில் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த உள்ளதாகவும், தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் மூலமாக அதற்கான உபகரணங்கள் கொள்முதல் செய்யப்பட்டு வருவதாகவும் தேசிய நலவாழ்வுக் குழுமத் திட்ட இயக்குநா் டாக்டா் அருண் தம்புராஜ் தெரிவித்தாா். இந்தத் திட்டம் படிப்படியாக மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்படுத்தப்படும் என்றும் அவா் தெரிவித்தாா்.

பேரவைத் தோ்தல்: வாக்குப்பதிவு பொருள்களுக்கான டெண்டா் வெளியீடு!

காரிய அனுகூலம் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

நில அளவையா்கள் காத்திருப்புப் போராட்டம்

நைஜீரியால் பள்ளி மாணவா்கள் மீண்டும் கடத்தல்

நிதீஷ் வெற்றி ரகசியம்!

SCROLL FOR NEXT