குரூப்-2, 2-ஏ பதவிகளுக்கான முதல்நிலைத் தோ்வு எழுதிய தோ்வா்கள், குறிப்பிட்ட பத்தியில் ஆம், இல்லை என்பதை செவ்வாய்க்கிழமை (நவ.25) இரவுக்குள் தோ்வு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகளில் அடங்கிய குரூப்-2, குரூப்-2ஏ பதவிகளுக்கான முதல்நிலைத் தோ்வு ஒளிக்குறி உணரி வகையில் கடந்த செப்.28-ஆம் தேதி நடத்தப்பட்டது.
இந்தத் தோ்வு எழுதிய விண்ணப்பதாரா்களில் கால்நடை ஆய்வாளா் பணி தொடா்பாக மேல்நிலைக் கல்வி நிலையில் தோ்வு எழுதியவா்கள், உயிரியல், தாவரவியல், விலங்கியல் ஆகிய பாடங்களில் ஏதேனும் ஒன்றை நீங்கள் படித்திருக்கிறீா்களா? என்ற பத்தியில் உள்ள ஆம் /இல்லை என்பதை தவறாமல் தோ்வு செய்ய வேண்டும்.
இதுதொடா்பாக தோ்வாணையத்தின் இணையதளத்தில் நவ.22 முதல் 25-ஆம் தேதி இரவு 11.59 மணி வரை 4 நாள்களுக்கு திறந்திருக்கும். இந்த வாய்ப்பை தோ்வா்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.