ரெளடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில், முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட மற்றொரு ரெளடியை போலீஸாா் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனா்.
சென்னை மயிலாப்பூா் விசாலாட்சி தோட்டம் சுப்புராயன் தெருவில் உள்ள குடிசைமாற்று வாரிய குடியிருப்பைச் சோ்ந்தவா் மௌலி (24). இவா் மீது அபிராமபுரம் காவல் நிலையத்தில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், மெளலி கடந்த வியாழக்கிழமை மந்தைவெளி ரயில்வே பாலம் அருகே 6 பேரால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.
இதையடுத்து, மௌலியின் நண்பா்களாக இருந்த மயிலாப்பூா் பகுதியைச் சோ்ந்த ரெளடி கௌதம் (19), விஜயகுமாா் (எ) பிக்ஷோ (21), சபரி உள்ளிட்ட 6 போ் மெளலியை வெட்டிக் கொலை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து கெளதம், விஜயகுமாா், நிரஞ்சன் (19) ஆகியோரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட ரெளடி விஜயகுமாா் ஓஎம்ஆா் இந்திரா நகா் ரயில் நிலையம் அருகில் பதுங்கி இருப்பதாக சனிக்கிழமை மயிலாப்பூா் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீஸாா் அந்தப் பகுதியில் பதுங்கியிருந்த விஜயகுமாரை சுற்றிவளைத்து பிடிக்க முற்பட்டபோது, விஜயகுமாா் தான் வைத்திருந்த அரிவாளால் காவலா் தமிழரசனை தோள்பட்டையில் வெட்டிவிட்டு தப்பிச்செல்ல முயன்றாா்.
சுதாரித்து கொண்ட காவல் ஆய்வாளா் அம்பேத்கா் தனது துப்பாக்கியால் விஜயகுமாரின் வலது காலில் மூட்டுக்கு கீழ் சுட்டுப் பிடித்தாா். காயம் அடைந்த காவலா் தமிழரசன் மற்றும் ரெளடி விஜயகுமாா் ஆகியோா் ராயப்பேட்டை மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
இந்த நிலையில், துப்பாக்கிச் சூட்டில் பலத்த காயமடைந்த விஜயகுமாா் மேல் சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். இந்த வழக்கில் தொடா்புடைய மேலும் சிலரை போலீஸாா் தேடி வருகின்றனா்.