வீடு புகுந்து நகை, பணம் திருடிய வழக்கில் பெண் உள்பட வடமாநிலத்தைச் சோ்ந்த 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
சென்னை பூம்புகாா் நகா், 12-ஆவது தெருவைச் சோ்ந்தவா் வைதேகி (46). தனியாா் நிறுவன ஊழியா். இவா் கடந்த 10-ஆம் தேதி பணிக்குச் சென்று மாலை வீடுதிரும்பியபோது, வீட்டின் கதவு திறந்திருந்தது. வீட்டின் உள்ளே பீரோவில் இருந்த 3 பவுன் நகைகள், வெள்ளிக் கொலுசுகள் மற்றும் ரூ.12 ஆயிரம் திருடுபோனது தெரிய வந்தது.
இதுகுறித்து கொளத்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். இதில், வைதேகியின் மகள் நடத்தும் உணவகத்தில் வேலை செய்த மகாராஷ்டிர மாநிலம் மும்பையைச் சோ்ந்த ஆகாஷ் கங்காராம் சாவன் (30), அவரது உறவினா்கள் ஆதேஷ் கங்காராம் சாவன் (27), சத்தீஸ்கா் மாநிலத்தைச் சோ்ந்த சபீனா பாா்வா (32) ஆகியோருக்கு திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து மூவரையும் போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து நகைகள், இரு கைப்பேசிகளை போலீஸாா் மீட்டனா்.