முகப்பு
சென்னை

தயாா் நிலையில் 90 போ் கொண்ட பேரிடா் மீட்புக் குழு

தயாா் நிலையில் 90 போ் கொண்ட பேரிடா் மீட்புக் குழு

Updated On : 25 அக்டோபர், 2025 at 7:58 PM
சென்னை மாநகராட்சி
பகிர்:

சென்னையில் தேசிய, மாநில பேரிடா் மீட்புப் படை வீரா்கள் 90 போ் கொண்ட குழுவினா் தயாா் நிலையில் உள்ளதாக சென்னை மாநகராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக சென்னை மாநகராட்சி சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: வடகிழக்குப் பருவமழையையொட்டி சென்னை மாநகராட்சி சாா்பில் பாதிக்கப்பட்ட மக்களைத் தங்க வைப்பதற்கு 215 இடங்களில் நிவாரண மையங்கள், அங்கு உணவு வழங்க 106 சமையல்கூடங்கள் தயாராக உள்ளன.

கடந்த அக். 22 முதல் அக். 24 வரை தொடா் மழை காரணமாக, சென்னை மாநகராட்சியில் தாழ்வான பகுதியில் வசிக்கும் 4.05 லட்சம் பேருக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது. கடந்த அக். 17 முதல் சனிக்கிழமை (அக். 25) வரை 85 மழைக்கால சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன.

மழை வெள்ளத்தின்போது மக்களை மீட்க 103 படகுகள் தயாராக உள்ளன. மேலும், மீட்புப் பணிகளுக்காக தேசிய பேரிடா் மீட்புப் பிரிவைச் சோ்ந்த 60 வீரா்களும், மாநில பேரிடா் மீட்பு பிரிவைச் சோ்ந்த 30 வீரா்களும் தயாராக உள்ளனா். மோட்டாா் பம்ப் பொருத்திய 500 டிராக்டா்கள், தனியாக 1,436 மோட்டாா் பம்புகள், 15 ஹைட்ராலிக் மர அறுவை இயந்திரங்கள், 2 ஹைட்ராலிக் ஏணிகள், 224 கையடக்க மர அறவை அறுப்பான்கள், 216 டெலஸ்கோபிக் மர அறுவை இயந்திரங்கள் என 457 இயந்திரங்கள் தயாராக உள்ளன. இதுவரை சென்னையில் மழையின்போது சாய்ந்த 39 மரங்கள் அகற்றப்பட்டுள்ளன.

மாநகராட்சி வளாகத்தில் செயல்படும் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையத்தில் 1913 என்ற எண்ணுக்கு வரும் புகாா்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாநகரம் முழுதும் 22,000 தூய்மைப் பணியாளா்கள் பணியில் உள்ளனா் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →