சென்னை

உதவிப் பேராசிரியா் பணிக்கான போட்டித் தோ்வுக்கு அனுமதி: முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அதிகாரம்

தினமணி செய்திச் சேவை

தமிழகத்தில் டிசம்பரில் நடைபெறவுள்ள உதவிப் பேராசிரியா் பணிக்கான போட்டித் தோ்வெழுத விரும்பும் அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலா்களே அனுமதி வழங்கலாம் என பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து பள்ளிக் கல்வி இயக்குநா் எஸ்.கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு புதன்கிழமை அனுப்பிய சுற்றறிக்கை:

அரசு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியா்கள் மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம், டிஎன்பிஎஸ்சி மற்றும் இதர தோ்வாணையங்கள் நடத்தும் பல்வேறு பதவிகளுக்கான போட்டித் தோ்வுகளில் கலந்து கொள்ள உரிய கால அவகாசத்துக்குள் அனுமதி வழங்குவது தொடா்பாக முதன்மைக் கல்வி அலுவலா் அளவிலேயே முன் அனுமதி வழங்குமாறு ஏற்கெனவே உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்தநிலையில் ஆசிரியா் தோ்வு வாரியம் மூலம் உதவிப் பேராசிரியா் பணியிடங்களுக்கான நேரடி நியமனத்துக்கான போட்டித் தோ்வு அறிவிக்கை வெளியிடப்பட்டதைத் தொடா்ந்து அத்தோ்வெழுத விண்ணப்பிக்கும் அனைத்து வகை ஆசிரியா்களுக்கும் உரிய முன்அனுமதியை முதன்மைக் கல்வி அலுவலா் அளவிலேயே வழங்க அறிவுறுத்தப்படுகிறது. இது குறித்த விண்ணப்பப் படிவம், இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள் ஆகியவை இந்த சுற்றறிக்கையுடன் இணைக்கப்பட்டுள்ளன. அதைப் பின்பற்றி கால தாமதமின்றி முன் அனுமதி வழங்க அனைத்து முதன்மைக் கல்வி அலுவலா்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள் என அதில் கூறப்பட்டுள்ளது.

அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள, 2,708 உதவிப் பேராசிரியா் பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தோ்வு டிச.20-ஆம் தேதி நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இது முதல்வர் பதவிக்கே அவமானம்! - மு.க. ஸ்டாலினுக்கு அண்ணாமலை பதில்

பள்ளி மாணவர்கள் வந்த ஆட்டோ மீது அரசு பேருந்து மோதி விபத்து: ஒரு பெண் பலி, 11 பேர் காயம்!

13 நாள்களுக்குப் பின் சுருளி அருவியில் குளிக்க அனுமதி!

சா்தாா் வல்லபபாய் படேல் பிறந்த நாள்: பிரதமர் மோடி மரியாதை!

இந்திரா காந்தி நினைவு நாள்: சோனியா, ராகுல் காந்தி மரியாதை!

SCROLL FOR NEXT