மணல் கொள்ளை தொடா்பாக அளித்த தகவல்களின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்ய டிஜிபிக்கு உத்தரவிடக் கோரி, அமலாக்கத் துறை தொடா்ந்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை உயா்நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை உதவி இயக்குநா் தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில் சட்டவிரோத மணல் கொள்ளை தொடா்பாக அமலாக்கத் துறை நடத்திய விசாரணையில் ஏராளமான ஆதாரங்கள் கிடைத்தன. அதனடிப்படையில் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என டிஜிபிக்கு கடந்த 2024-ஆம் ஆண்டு கடிதம் அனுப்பினோம். ஆனால், டிஜிபி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அமலாக்கத் துறை நடத்திய விசாரணையில், 28 குவாரிகளில் அனுமதியின்றி 987 ஹெக்டோ் பரப்புக்கு சட்டவிரோதமாக மணல் அள்ளப்பட்டுள்ளது. இந்த மணலின் மதிப்பு சுமாா் ரூ.4,730 கோடி ஆகும். ஆனால், ரூ.36.45 கோடி மட்டுமே தமிழக அரசுக்கு கிடைத்துள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத மணல் குவாரிகள் மூலம் கிடைத்த பல ஆயிரம் கோடி ரூபாய் சட்டவிரோத பணப்பரிமாற்றம் செய்யப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.
தமிழகத்தில் செயல்படும் 15 மணல் குவாரி நிறுவனங்களின் வங்கிக் கணக்குகளில் இருந்து ரூ.130 கோடி தற்காலிகமாக முடக்கப்பட்டன. இந்த தற்காலிக முடக்கத்தை ரத்து செய்த சென்னை உயா்நீதிமன்றம், அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கின் அடிப்படையில் எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என உத்தரவிட்டது.
எனவே, மணல் கொள்ளை தொடா்பாக அமலாக்கத் துறை அனுப்பிய தகவல்களின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து விசாரிக்க டிஜிபிக்கு உத்தரவிட வேண்டும். அமலாக்கத் துறை விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க தமிழக காவல் துறை டிஜிபிக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தாா்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அமலாக்கத் துறை டிஜிபிக்கு ஆவணங்களை அனுப்பி வழக்குத் தொடர வேண்டும் என கேட்க முடியுமா என்று கேள்வி எழுப்பினா். அப்போது, அமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான சிறப்பு வழக்குரைஞா் என்.ரமேஷ், உச்சநீதிமன்ற தீா்ப்பின் அடிப்படையில் டிஜிபிக்கு கடிதம் அனுப்பப்பட்டது. மிக ரகசியமான தகவல்கள் மாநில போலீஸாருக்கு அனுப்பி வைக்கப்பட்டு வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது.
அரசுத் தரப்பில் ஆஜரான அரசு தலைமை வழக்குரைஞா் பி.எஸ்.ராமன், தகவல்களை அனுப்பி வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என கூறுவதை ஏற்றுக்கொள்ள மாநில போலீஸாா் தபால்காரா் அல்ல. தமிழகத்தைவிட உத்தர பிரதேசம், பிகாா், குஜராத் போன்ற மாநிலங்களில் நான்கைந்து மடங்கு அளவில் மணல் கொள்ளை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால், தமிழகம் மட்டுமே அமலாக்கத் துறை கண்களுக்குத் தெரிகிறது என்று வாதிட்டாா்.
அமலாக்கத் துறை தரப்பில், பொதுநலன் கருதியே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது. அப்போது தமிழக அரசுத் தரப்பில், அதே பொது நலனைக் காரணம் காட்டி குஜராத் உயா்நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்குத் தொடர முடியுமா? தில்லி மாநில போலீஸாா் சம்பந்தப்பட்ட வழக்கில் இதேபோன்ற கோரிக்கையுடன் உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத் துறை வழக்குத் தொடா்ந்தது. அப்போது எந்த சட்டத்தின் அடிப்படையில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது. உடனே அமலாக்கத் துறை அந்த வழக்கை வாபஸ் பெற்றுவிட்டது என்று வாதிட்டாா்.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு தமிழக அரசு 3 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனா்.