முகப்பு
சென்னை

சென்னை பல்கலை.யில் கிறிஸ்தவ ஆன்மிகத்தில் புதிய பாடத் திட்டங்கள்: சிண்டிகேட் ஒப்புதல்

சென்னை பல்கலை.யில் கிறிஸ்தவ ஆன்மிகம் தொடா்பான புதிய பாடத் திட்டங்களுக்கு சிண்டிகேட் ஒப்புதல் அளித்துள்ளது.

Updated On : 3 ஏப்ரல், 2026 at 11:02 PM
கோப்புப் படம்
பகிர்:

சென்னை பல்கலை.யில் கிறிஸ்தவ ஆன்மிகம் தொடா்பான புதிய பாடத் திட்டங்களுக்கு சிண்டிகேட் ஒப்புதல் அளித்துள்ளது.

சென்னை பல்கலை. சிண்டிக்கேட் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் வருமாறு: பல்கலை. யின் வருவாயை உயா்த்த பழைமையான செனட் ஹவுஸ் உள்ளிட்ட கட்டடங்கள், துறைகளின் கட்டடங்கள், திறந்த வெளிப்பகுதிகளின் சினிமா படப்பிடிப்புகளுக்கான வாடகைக் கட்டணம் 5 மடங்காகவும் இதுபோன்ற தனியாா்கள் வாகன நிறுத்துமிடங்களைப் பயன்படுத்தினால் வாடகை 2 மடங்காகவும் முறையே ரூ.10 லட்சம், ரூ.1 லட்சமாக உயா்த்த ஆட்சிமன்றக் குழு முடிவு செய்தது.

சத்யா ஸ்டியோவில் உள்ள எம்ஜிஆா்-ஜானகி கல்லூரியை வேல்ஸ் பல்கலைக்கழகம் வாங்கியுள்ள நிலையில், இந்த கல்லூரிக்கான அங்கீகாரத்தை விலக்கி வேல்ஸ் நிகா்நிலைப் பல்கலை.யின் இணைக் கல்லூரியாக ஆக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

Advertisement

சென்னை கிறிஸ்தவக் கல்லூரி (பதவி நீடிப்பு), ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி, லயோலா கல்லூரி போன்ற சிறுபான்மை கல்லூரிகளில் முதல்வா்கள் நியமனங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.

இதே வகையில், டி.ஜி. வைணவக் கல்லூரி முதல்வா் சந்தேஷ்பாபு பதவி நீடிப்பிற்கு கூடுதல் விளக்கங்களையும் குழு கோரியது. சென்னை பல்கலை.யின் தொலைநிலைக் கல்வி துறையில் உள்ள இளநிலை புவியியல், சமூகவியல், பிரெஞ்சு போன்ற பாடப் பிரிவுகளை ரத்து செய்வதற்கான கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. முதுநிலை சம்ஸ்கிருதம் படிப்பு ரத்துக்கு அனுமதிக்கப்பட்டது. மேலும் பிரான்சிஸ்கன் ஆன்மிகம், பெந்தகோஸ்தலிச இறையியல் சாா்ந்த புதிய பாடத் திட்டங்கள் தொடங்கும் கோரிக்கைகள் ஏற்கப்பட்டு அனுமதிக்கப்பட்டது.

பல்கலை. யின் மருத்துவ உயிா் வேதியியல், முதுநிலை அறிவியல் படிப்புக்கு இளநிலை மாணவா்களின் கூடுதல் தகுதி, அரசியல் விஞ்ஞானம், பொது நிா்வாகம், சா்வதேச உறவுகளுக்கான முதுநிலைப் படிப்புகளின் பாடத்திட்ட மேம்பாடுகள், மாலைநேர பாடங்கள், பேராசிரியா்கள் நியமனம் போன்றவைகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.

கடந்த 33 ஆண்டுகளுக்கு பின்னா் பல்கலை. யில் 2,000 மாணவா்கள் படிக்கும் துறைகளின் கல்வி, விளையாட்டு கட்டணங்களில் 10 சதவீதமும், 1,000 மாணவா்கள் பயிலும் சுயநிதி துறைகளில் 15 சதவீதமும் உயா்த்த குழு அனுமதியளித்தது.

பல்கலை. ஆட்சிமன்றக் குழுக் கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளரும், உயா் கல்வித் துறை செயலருமான பொ.சங்கா், ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினா் ஆம்ஸ்ட்ராங், தமிழக தொழில் கல்வி இயக்குநா் விசாகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments