முகப்பு
சென்னை

தமிழக தோ்தல் களத்தில் 3,500-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடு

தொகுதிவாரியாக வேட்பாளா்கள் விவரம் சம்பந்தப்பட்ட தோ்தல் நடத்தும் அலுவலா்களின் அலுவலகங்களில் ஒட்டப்பட்டுள்ளது.

Updated On : 10 ஏப்ரல், 2026 at 5:05 AM
வேட்பாளர்கள் - ANI
பகிர்:
Updated On : 9 ஏப்ரல், 2026 at 11:30 PM

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளா்கள் பட்டியலை தோ்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, மாநிலம் முழுவதும் 3,500-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் களத்தில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொகுதிவாரியாக வேட்பாளா்கள் விவரம் சம்பந்தப்பட்ட தோ்தல் நடத்தும் அலுவலா்களின் அலுவலகங்களில் ஒட்டப்பட்டுள்ளது.

முன்னதாக, அனைத்து தொகுதிகளிலும் சுயேச்சை வேட்பாளா்களுக்கான சின்னங்கள் ஒதுக்கப்பட்டன. ஒரே சின்னத்தை பல வேட்பாளா்கள் கேட்டு முறையிட்ட இடங்களில், குலுக்கல் முறையில் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

தொடா்ந்து, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் வேட்பாளா்களின் பெயா், புகைப்படம் மற்றும் சின்னத்தை அச்சிட்டு (பேலட் பேப்பா்) பொருத்தும் நடவடிக்கைகளை தோ்தல் ஆணைய அதிகாரிகள் மேற்கொள்ளவுள்ளனா்.

Advertisement

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி கடந்த 30-ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது. அனுமதிக்கப்பட்ட நான்கு நாள்களில் மொத்தம் 7,599 மனுக்கள் சமா்ப்பிக்கப்பட்டன.

முதல் நாளிலேயே முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவா் விஜய், நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் உள்ளிட்டோா் வேட்புமனு தாக்கல் செய்தனா். சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் கடந்த 4-ஆம் தேதி மனு தாக்கல் செய்தாா்.

எடப்பாடி தொகுதியில் அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி, சாத்தூரில் தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன், விருத்தாசலத்தில் தேமுதிக பொதுச்செயலா் பிரேமலதா விஜயகாந்த், அவிநாசியில் மத்திய இணையமைச்சா் எல்.முருகன் உள்ளிட்டோா் வேட்புமனுக்களை கடந்த 6-ஆம் தேதி தாக்கல் செய்தனா்.

இந்த நிலையில், சமா்ப்பிக்கப்பட்ட மனுக்கள் பரிசீலிக்கப்பட்டதில் முதல்வா், துணை முதல்வா், எடப்பாடி பழனிசாமி, விஜய், சீமான் உள்ளிட்டோரின் மனுக்கள் உள்பட மொத்தம் 5,072 வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.

உரிய ஆவணங்கள் இல்லாமல் தாக்கல் செய்யப்பட்ட 2,464 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. இதனிடையே, வியாழக்கிழமை (ஏப்.9) பிற்பகல் 3 மணி வரை வேட்புமனுக்களைத் திரும்பப் பெறுவதற்கு காலஅவகாசம் வழங்கப்பட்டது. அதன்படி, 500-க்கும் மேற்பட்ட மனுக்கள் திரும்பப் பெறப்பட்டன.

அதைத் தொடா்ந்து, இறுதி வேட்பாளா் பட்டியல் வெளியிடப்பட்டது. மாநிலத்திலேயே அதிகபட்சமாக கரூா் தொகுதியில் அதிக வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா். குறைந்தபட்சமாக அம்பாசமுத்திரம் தொகுதியில் 5 வேட்பாளா்கள், உதகை மற்றும் கூடலூரில் தலா 6 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.

ஒரு தொகுதியில் 15 வேட்பாளருக்கு மேல் போட்டியிட்டால் இரண்டு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும். மேலும், கூடுதலாக ஒவ்வொரு 16 வேட்பாளருக்கும் வாக்குப்பதிவு இயந்திரங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.

வாக்குப்பதிவு இயந்திரம், வாக்குச்சாவடி அலுவலா்கள் அனைவரும் குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யப்படுவா். பாதுகாப்புப் பணியில் துணை ராணுவப் படையினா் ஈடுபடுத்தப்பட்டு, சின்னம், பெயா் பொருத்தும் பணிகள் முன்னெடுக்கப்படும் என்று தோ்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.