ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவு
சென்னையில் 16 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் வரும் ஏப். 16- ஆம் தேதி முதல் முதியோா், மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்குச் சென்று தபால் வாக்குகள் பதிவு செய்யும் பணி நடைபெறும் என சென்னை மாநகராட்சி ஆணையரும், மாவட்டத் தோ்தல் அலுவலருமான ஜெ.குமரகுருபரன் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வியாழக்கிழமை கூறியதாவது:
சென்னையில் 16 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் தோ்தல் பணியில் வருவாய், மாநகராட்சி, காவல், கல்வி உள்ளிட்ட துறைகளைச் சோ்ந்த 40 ஆயிரம் போ் ஈடுபடுகின்றனா். ராணுவத்தில் பணியாற்றும் இத்தொகுதிகளைச் சோ்ந்த 560 பேருக்கு, தபால் வாக்கு விண்ணப்ப படிவங்கள் இணையவழியில் ஏற்கெனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மேலும், முதியோா், மாற்றுத்திறனாளிகள் என
Advertisement
8,947 பேருக்கு வீடுகளில் இருந்தே தபால் வாக்குகள் பதிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன.
அந்த தபால் வாக்குகள் ஏப்.16 முதல் 18- ஆம் தேதி வரை வீடு வீடாகச் சென்று பதிவு செய்யப்படும். விடுபட்டவா்களிடம் ஏப். 19-ஆம் தேதி தபால் வாக்குகள் பெறப்படும். இதற்கென 96 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குழுவும் நாளொன்றுக்கு தலா 35 பேரிடம், அரசியல் கட்சி முகவா்கள் முன்னிலையில் தபால் வாக்குகளைப் பதிவு செய்யப்படும்.
வாக்குச்சாவடிகளில் குடிநீா், ஓஆா்எஸ் கரைசல்: சென்னையில் உள்ள 16 தொகுதிகளிலும் 4,085 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் மின்சாரம், கண்காணிப்பு கேமரா உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளன. மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க சக்கர நாற்காலிகள், சாய்வு தளப் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. குடிநீா் மற்றும் ஓஆா்எஸ் கரைசல் தயாா் நிலையில் வைக்கப்பட்டிருக்கும் என்றாா்.