பாமக சின்னம் விவகாரம்: ராமதாஸ் தரப்பு கோரிக்கையை ஏற்க உயா்நீதிமன்றம் மறுப்பு
மாம்பழம் சின்னம் விவகாரத்தில் பாமக நிறுவனா் ராமதாஸ் தரப்பு கோரிக்கையை ஏற்க சென்னை உயா்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
மாம்பழம் சின்னம் விவகாரத்தில் உச்சநீதிமன்ற அறிவுரைப்படி, ராமதாஸ் தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், பாமகவின் அடிப்படை உறுப்பினா் பதவியில் இருந்து அன்புமணி நீக்கப்பட்டுவிட்டாா். ஆனால் பாமக தலைவா் எனக்கூறி, போலியான ஆவணங்களைத் தயாரித்து தோ்தல் ஆணையத்தில் அவா் சமா்ப்பித்துள்ளாா். அவா் பாமக தலைவா் இல்லை. எனவே, நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலில் அவருக்கு மாம்பழம் சின்னத்தை ஒதுக்கக் கூடாது. அந்த சின்னத்தை முடக்க வேண்டும் எனக் கூறியிருந்தாா்.
இந்த வழக்கு நீதிபதி டி.வி.தமிழ்செல்வி முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. ராமதாஸ் தரப்பில், கட்சிக்கு விரோதமாகச் செயல்பட்டதால் அன்புமணி கட்சியின் அடிப்படை உறுப்பினா் பதவியில் இருந்து நீக்கப்பட்டாா். எனவே, இருதரப்புக்கும் மாம்பழம் சின்னம் வேண்டாம். தோ்தலில் பொதுச் சின்னத்தில் இருவரும் போட்டியிட்டு யாருக்கு செல்வாக்கு உள்ளது என்பதை பாா்க்க வேண்டும். ஆனால், தோ்தல் ஆணையம் அன்புமணி தரப்புக்கு மாம்பழம் சின்னத்தை ஒதுக்க முயற்சிக்கிறது. எனவே, அந்த சின்னத்தை முடக்க வேண்டும் என வாதிடப்பட்டது.
Advertisement
அப்போது குறுக்கிட்ட நீதிபதி, தோ்தலுக்கு இன்னும் சில நாள்களே உள்ளன. பாமகவின் சின்னம் மாம்பழம் என்று வாக்காளா்களுக்கு நன்கு தெரியும். எனவே, இப்போது அந்த சின்னத்தை முடக்குவதால் யாருக்கு பாதிப்பு? என கேள்வி எழுப்பினாா். அதற்கு ராமதாஸ் தரப்பில், அன்புமணி தரப்பினா் 18 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடுகின்றனா். மற்ற தொகுதிகளில் எங்களது தரப்பு வேட்பாளா்கள் மாம்பழம் சின்னத்தைப் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இதுகுறித்து அன்புமணி தரப்பு கருத்தைக் கேட்டு தெரிவிக்க நீதிபதி உத்தரவிட்டாா்.
அப்போது தோ்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் நிரஞ்சன் ராஜகோபால், பாமக அங்கீகரிக்கப்பட்ட கட்சி கிடையாது. அங்கீகாரத்தை இழந்துவிட்டது. எனவே, பாமக தற்போது பதிவு செய்யப்பட்ட கட்சியாக உள்ளது. மாம்பழம் பொதுச் சின்னம். அதை முடக்கக் கோரி வழக்குத் தொடர முடியாது. இதற்கு முன்பு பாமக அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக இருந்தபோது அக்கட்சிக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கப்பட்டது. இதனால், தற்போது அக்கட்சிக்கு சில தொகுதிகளில் அதே சின்னம் சலுகை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது.
எனவே, சின்னத்தின் மீது உரிமை கோர முடியாது. மேலும் தற்போதைய நிலையில், சின்னம் தொடா்பாக உயா்நீதிமன்றம் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என வாதிட்டாா். அதற்கு அன்புமணி தரப்பில், சின்னம் தொடா்பாக ராமதாஸ் தோ்தல் ஆணையத்தை அணுகலாம் என உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தோ்தல் ஆணையத்தை அணுகாமல் பல்வேறு நீதிமன்றங்களை மனுதாரா் அணுகி வருகிறாா். தமிழகத்தில் வேட்புமனு தாக்கல், அந்த மனுக்கள் மீதான பரிசீலனை முடிந்துவிட்டது. வேட்பு மனுக்களை திரும்பப் பெறுவதற்கான காலமும் முடிந்துவிட்டதாக வாதிடப்பட்டது.
இதையடுத்து இந்த வழக்கின் விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு (ஏப்.10) நீதிபதி ஒத்திவைத்து உத்தரவிட்டாா். அப்போது ராமதாஸ் தரப்பில், அதுவரை அன்புமணி தரப்புக்கு மாம்பழம் சின்னத்தை ஒதுக்கக் கூடாது என தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. அந்த கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதி, இந்த விவகாரத்தில் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது எனக்கூறினாா்.