மாம்பழம் சின்னம் விவகாரம்: ராமதாஸுக்கு தொடர் பின்னடைவு!
பாமகவின் மாம்பழம் சின்னத்தை முடக்கக்கோரிய ராமதாஸின் மனுவை ஏற்க உயர் நீதிமன்றம் மறுப்பு.
பாமகவின் மாம்பழம் சின்னத்தை முடக்கக்கோரிய, அந்தக் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை ஏற்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
வழக்கு விசாரணையானது வழக்கமான முறையில் உரிய அமர்வில் பட்டியலிடப்படும் என தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது.
பாமக பெயர், சின்னம், கட்சிக் கொடி ஆகியவற்றை அன்புமணி பயன்படுத்தத் தடை விதிக்க வேண்டும், கட்சியின் தலைவராக தன்னை அறிவிக்க வேண்டும் எனக் கோரி, பாமக நிறுவனர் ச. ராமதாஸ் தாக்கல் செய்த மனுவை சென்னை உரிமையியல் நீதிமன்றம் கடந்த மாா்ச் 26-ஆம் தேதி தள்ளுபடி செய்தது.
Advertisement
Advertisement
இதுதொடா்பாக உரிமையியல் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், சட்டம் அனுமதித்தால் இந்த விவகாரம் தொடர்பாக ராமதாஸ் தோ்தல் ஆணையத்தை அணுகலாம். அந்தக் கோரிக்கையை தோ்தல் ஆணையம் சட்டப்படி பரிசீலித்து முடிவெடுக்கலாம் எனக் கூறியிருந்தது.
இந்த உத்தரவை எதிர்த்து ராமதாஸ் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ராமதாஸ் கோரிக்கை தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தை அணுக உத்தரவிட்டிருந்தது.
அதன்படி, சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் ராமதாஸ் தரப்பில், உச்ச நீதிமன்ற உத்தரவைச் சுட்டிக்காட்டி, சின்னம் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டது.
அதற்கு நீதிபதிகள், மனுவாக தாக்கல் செய்தால், வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனத் தெரிவித்தனர்.
மாம்பழம் சின்னம் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு எடுக்கக் கோரி பாமக நிறுவனர் ராமதாஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை முறையிடப்பட்டது.
இந்த வழக்கு இன்று(ஏப். 9) விசாணைக்கு வந்த நிலையில், அவசர வழக்காக ஏற்க முடியாது, வழக்கமான அமர்வில் விசாரணைக்கு பட்டியலிடப்படும் என சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது.
The Madras High Court has refused to entertain the appeal petition filed by PMK founder Ramadoss, seeking to freeze the party's 'Mango' election symbol.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.