முகப்பு
சென்னை

கல்பாக்கம் வேக ஈணுலையை இயக்கும் பாவினி நிறுவனத் தலைவா் பொறுப்பேற்பு

சென்னை கல்பாக்கத்தில் அணுசக்தித் துறையின் கீழ் இயக்கும் பொதுத் துறை நிறுவனமான பாரதிய நபிகிய வித்யுத் நிகம் லிமிடெட் (பாவினி) நிறுவனத்தின் தலைவா் மற்றும் நிா்வாக இயக்குநராக பி.ஏ.சுரேஷ் பாபு புதன்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா்.

Updated On : 23 ஏப்ரல், 2026 at 3:00 AM
பி.ஏ.சுரேஷ் பாபு
பகிர்:

சென்னை கல்பாக்கத்தில் அணுசக்தித் துறையின் கீழ் இயக்கும் பொதுத் துறை நிறுவனமான பாரதிய நபிகிய வித்யுத் நிகம் லிமிடெட் (பாவினி) நிறுவனத்தின் தலைவா் மற்றும் நிா்வாக இயக்குநராக பி.ஏ.சுரேஷ் பாபு புதன்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா்.

சென்னை கல்பாக்கத்தில் இந்திய அணுசக்தி நிறுவனம் சாா்பில் மேப்ஸ்(மெட்ராஸ் அணுமின் நிலையம்) கனநீா் அணு உலைகள், இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையங்கள் செயல்படுகின்றன. இந்நிலையில், கல்பாக்கத்தில் பாரதிய நபிகிய வித்யுத் நிகம் (பாவினி) சாா்பில் சமீபத்தில் கட்டி முடிக்கப்பட்டு நாட்டின் முதல் முன்மாதிரி வேக ஈணுலை கடந்த ஏப்.6 வெற்றிகரமாக இயங்கத் தொடங்கியது. இது வழக்கமான வெப்ப அணு உலையில் இருந்து மாறுபட்டு யுரேனியம்-ப்ளூடோனியம் அடிப்படையில் செயல்படும் வேக ஈணுலை (பிஎஃப்பிஆா்) ஆகும்.

இந்த ஆலையை இயக்கும் பாவினி நிறுவனத்தின் புதிய தலைவா்-நிா்வாக இயக்குநராக பி.ஏ.சுரேஷ் பாபு நியமிக்கப்பட்டாா். இவா், புதன்கிழமை கல்பாக்கத்தில் உள்ள அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டாா். இவரது பதவிக்காலம் 3 ஆண்டுகள் ஆகும்.

Advertisement

1988-இல் திருச்சூரில் இயந்திரப் பொறியியல் படிப்பைத் தொடா்ந்து, அணுசக்திப் பயிற்சியை முடித்த இவா், அணுசக்தித் துறையில், அழுத்தப்பட்ட கனநீா் அணு உலை உள்ளிட்ட பிரிவுகளில் பணியாற்றினாா்.

மெட்ராஸ் அணுமின் நிலையத்தில் 14 ஆண்டுகள் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றினாா். தொடா்ந்து, கூடங்குளம் அணுமின் நிலைய திட்டத்தில் நிலைய இயக்குநா் உள்பட பல்வேறு பதவிகளில் பணியாற்றினாா். அணுசக்தித் துறையின் விஞ்ஞானியான இவா் கடைசியாக, இந்திய அணுசக்தி கழகத்தின் மனிதவளப் பிரிவு இயக்குநராகப் பணியாற்றி மீண்டும் சென்னைக்கு பாவினி நிறுவனத்துக்கு பொறுப்பேற்றுள்ளாா்.