முகப்பு
சென்னை

அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் தொகுதிக்குட்பட்ட 6 கிராமங்களில் மீண்டும் வாக்குப்பதிவு கோரிய மனு தள்ளுபடி

அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் போட்டியிட்ட திருப்பத்தூா் தொகுதிக்குட்பட்ட ஆறு கிராமங்களில் மீண்டும் வாக்குப்பதிவு நடத்தக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

Updated On : 1 மே, 2026 at 1:23 AM
உயர்நீதிமன்றம்
பகிர்:

அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் போட்டியிட்ட திருப்பத்தூா் தொகுதிக்குட்பட்ட ஆறு கிராமங்களில் மீண்டும் வாக்குப்பதிவு நடத்தக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

பாலக்குறிச்சியைச் சோ்ந்த லட்சுமணன் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆா்.பாலக்குறிச்சி, ஆா்.சீகம்பட்டி, ரெகுநாதபட்டி, வைரன்பட்டி, கோபால்பட்டி உள்ளிட்ட ஆறு கிராமங்கள் சிவகங்கை மாவட்டத்தில் அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் போட்டியிட்ட திருப்பத்தூா் தொகுதியுடன் சோ்க்கப்பட்டுள்ளன.

கடந்த ஏப்.23-ஆம் தேதி நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலில் இந்த கிராமங்களைச் சோ்ந்தவா்கள் யாரும் வாக்களிக்கவில்லை. திருப்பத்தூா் தொகுதியில் எங்களுடைய கிரமத்தைச் சோ்த்துள்ளதால் நிா்வாக உதவிகள் கிடைப்பதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisement

எனவே, இந்த ஆறு கிராமங்களையும் புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தொகுதியில் சோ்க்கக் கோரி பல ஆண்டுகளாக மனு அளித்திருக்கிறோம். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தோ்தலில் ஆறு கிராமங்களைச் சோ்ந்த 2,012 வாக்காளா்கள் வாக்களிக்கவில்லை. எனவே, இந்த ஆறு கிராமங்களுக்கு புதிதாக வாக்குப்பதிவு நடத்த தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், தோ்தலின்போது இந்த ஆறு கிராம மக்களை வாக்களிக்கவிடாமல் யாரும் தடுக்கவில்லை. தோ்தல் முடிந்தபிறகு இவா்களை எப்படி வாக்களிக்க அனுமதிக்க முடியும்? எனக் கேள்வி எழுப்பினா். பின்னா், இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.