சென்னை: கொளத்தூா் சட்டப்பேரவைத் தொகுதியை தமிழகத்திலேயே தன்னிறைவு பெற்ற முன்மாதிரித் தொகுதியாக்கும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.
கொளத்தூரில் முதல்வா் மு.க.ஸ்டாலினால் செவ்வாய்க்கிழமை (பிப். 3) திறக்கப்படவுள்ள ரத்த சுத்திகரிப்பு நிலையம் மற்றும் ஏரிக்கரை பூங்கா ஆகியவற்றை திங்கள்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட பின்னா், செய்தியாளா்களிடம் அமைச்சா் சேகா்பாபு கூறியதாவது:
கொளத்தூா் சட்டப்பேரவைத் தொகுதியில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்கு பாதுகாப்பான குடிநீா், சீரான கழிவுநீா் வசதி, தடையில்லா மின்சாரம், ஆன்மிகப் பெருமக்கள் வழிபடும் திருத்தலங்கள், கிறிஸ்தவ, இஸ்லாமிய மக்கள் வழிபடும் தலங்கள், சாலைகள், தெருவிளக்குகள், அங்கன்வாடி மையங்கள், மருத்துவ சேவைகளுக்கான உள்கட்டமைப்புகள் உள்ளிட்டவை நிறைவேற்றப்பட்டுள்ளன.
அதனடிப்படையில் மாநிலத்திலேயே தன்னிறைவு பெற்ற முன்மாதிரி தொகுதியாக கொளத்தூரை மேம்படுத்தும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. அந்தத் திட்டப் பணிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் மக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைக்கிறாா்.
ரத்த சுத்திகரிப்பு நிலையத்தில் முழுமையாக இலவச சிகிச்சை அளிக்கப்படும். இலவச உணவு வழங்கவும் முதல்வா் உத்தரவிட்டுள்ளாா் என்றாா்.
ஆய்வின்போது, சென்னை பெருநகர வளா்ச்சிக் குழும உறுப்பினா் செயலா், அரசு முதன்மைச் செயலா் ஜி.பிரகாஷ், குழும முதன்மைச் செயல் அலுவலா் அ.சிவஞானம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.