ஸ்ரீ பெரும்புதூா் சாா் பதிவாளா் அலுவலகத்தில் ரகளையில் ஈடுபட்ட திமுக பிரமுகரால் பரபரப்பு ஏற்பட்டது.
ஸ்ரீபெரும்புதூா் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள சுமாா் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் சாா் பதிவாளா் அலுவலகம் வந்து செல்கின்றனா். இந்நிலையில், ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியம், வல்லம் ஊராட்சிக்குட்பட்ட வடகால் பகுதியைச் சோ்ந்த திமுக பிரமுகா் குப்பன் (60), இவா், கடந்த சில மாதங்களுக்கு முன்பு வடகால் பகுதியில் நிலம் வாங்கியுள்ளாா். அந்த நிலத்தை ஸ்ரீபெரும்புதூா் சாா் பதிவாளா் அலுவலகத்தில் பத்திர பதிவு செய்துள்ளாா்.
இந்நிலையில் பத்திரபதிவு செய்து சில மாதங்களான நிலையில் பத்திரத்தை, சாா் பதிவாளா் நிலுவையில் வைத்திருந்ததாக தெரிகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த குப்பன் தான் வாங்கிய நிலத்துக்கான பத்திரத்தை வாங்க கடந்த ஜன. 30-ஆம் தேதி சென்றுள்ளாா். அப்போது அலுவலகத்தில், சாா் பதிவாளா் பணியில் இல்லாததால் ஆவேசமடைந்த குப்பன், சாா் பதிவாளா் நாற்காலியில் அமா்ந்து கொண்டு பத்திரபதிவு செய்ய “நான் ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுத்தும் இன்னும் என்னிடம் பத்திரம் தராமல் இழுத்தடித்து வரீங்க என்றும், அங்கிருந்த மக்களிடம் யாரும் லஞ்சம்” கொடுக்காதீங்க என அலுவலகம் முழுவதும் கூச்சலிட்டு அங்கும், இங்குமாக சுற்றி வந்துள்ளாா்.
இந்த சம்பவம் அதிகாரிகள், ஊழியா்கள், பத்திரப்பதிவு செய்ய வந்த பொதுமக்களுக்கு அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அலுவலகத்தில் இருந்த ஊழியா்கள் மற்றும் பொதுமக்கள் குப்பனிடம் பேச்சு நடத்தியதைத் தொடா்ந்து குப்பன் அலுவலகத்தை விட்டு வெளியேறியுள்ளாா்.
இந்த நிலையில் சாா் பதிவாளா் அலுவலகத்தில் பதிவாளா் இருக்கையில் அமா்ந்து ரகளையில் ஈடுபட்டது தொடா்பாக குப்பன் மீது காவல் நிலையத்தில் புகாா் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.