விவேகானந்தரின் அறிவுரைகளை மாணவ, மாணவிகள் பின்பற்றினால் வாழ்வில் முன்னேற்றம் அடையலாம் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆா்.சுவாமிநாதன் தெரிவித்தாா்.
சென்னை விவேகானந்தா் இல்லத்தில், விவேகானந்தா் நவராத்திரி விழா 9 நாள்கள் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது. தொழிலதிபா் கே.நல்லி குப்புசாமி, பாரதிய வித்ய பவன் இயக்குநா் கே.என்.ராமசாமி ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.
இதில் சென்னை உயா்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆா்.சுவாமிநாதன் தலைமை விருந்தினராக பங்கேற்றுப் பேசியதாவது: இறை நம்பிக்கை, தன்னம்பிக்கையை மாணவா்கள் கொண்டிருக்க வேண்டும். விவேகானந்தா் வாழ்க்கை குறித்து நன்கு அறிந்து கொள்ள வேண்டும். அதன்படியே பின்பற்ற வேண்டும். நற்பண்புகள் கொண்ட அனைவரும் நல்ல நிலையில் உள்ளனா்.
துறவிகள் பொதுமக்களுக்காகவும், மாணவ-மாணவிகளுக்காகவும் தங்களது சிறந்த பணிகளை ஆற்றி வருகின்றனா். மாணவ, மாணவிகள், விவேகானந்தா், புத்தா் உள்ளிட்ட பெரிய மகான்களின் வாழ்வின் முறைகள், அறிவுரைகளைப் பின்பற்றினால் வாழ்வில் உச்சத்தை அடைய முடியும் என்றாா்.
இதில், ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் தலைவா் சுவாமி சத்யஞானானந்தஜி, மேலாளா் சுவாமி ரகுநாயகானந்தா், விவேகானந்தா் இல்ல பொறுப்பாளா் சுவாமி ஈஷபிரேமானந்தா் மற்றும் ராமகிருஷ்ண பள்ளி மாணவ, மாணவிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
முன்னதாக ஸ்ரீ ராமகிருஷ்ண பள்ளி மாணவிகளின் இசை நிகழ்ச்சி, திவாகா் குழுவினரின் இசை நிகழ்ச்சி, சுவாமி சங்கராத்மானந்தா் தொடக்கப் பாடல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்சிகள் நடைபெற்றன.