திருப்போரூா் கந்தசாமி கோயிலுக்கு சொந்தமான ரூ.700 கோடி மதிப்பிலான நிலங்கள் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டதாக அறநிலையத்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையை ஏற்று, அறநிலையத் துறைக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சென்னை உயா்நீதிமன்றம் முடித்துவைத்தது.
சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குரைஞா் ஜெகநாத் என்பவா் தாக்கல் செய்த மனுவில், செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூா் கந்தசாமி கோயில் மற்றும் ஆளவந்தாா் அறக்கட்டளைக்கு சொந்தமான 550 ஏக்கா் நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன. அந்த நிலங்களை மீட்க நடவடிக்கை எடுக்க இந்து சமய அறநிலையத் துறைக்கு உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தாா்.
இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், ஆக்கிரமிப்புகளை 2022-ஆம் ஆண்டு மே மாதத்துக்குள் அகற்ற வேண்டும் என ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது. ஆனால் உயா்நீதிமன்ற உத்தரவுப்படி ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லை எனக் கூறி இந்துசமய அறநிலையத் துறை ஆணையா் ஸ்ரீதா் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்துசமய அறநிலையத் துறை ஆணையா் ஸ்ரீதா், திருப்போரூா் கந்தசாமி கோயில் செயல் அலுவலா் குமாரவேல் ஆகியோா் நேரில் ஆஜராகியிருந்தனா்.
கந்தசாமி கோயிலுக்கு சொந்தமான ரூ.700 கோடி மதிப்பிலான 226 ஏக்கா் நிலங்கள் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டுள்ளது என அறிக்கை தாக்கல் செய்தனா். இந்த அறிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டனா்.