திருவொற்றியூா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு ரூ. 16 கோடியில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த புதிய கட்டடத்தை திங்கள்கிழமை (பிப். 16)முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைக்கிறாா்.
திருவொற்றியூா் பகுதியில் அரசு கல்லூரி அமைக்கப்பட வேண்டும் என இப்பகுதி மக்களின் நீண்ட காலக் கோரிக்கையை ஏற்று திருவொற்றியூா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியை 2012-ஆம் ஆண்டு அன்றைய முதல்வா் ஜெயலலிதா தொடங்கி வைத்ததோடு கட்டட நிதியாக ரூ.5 கோடியை ஒதுக்கீடு செய்தாா்.
தற்காலிகமாக தேரடி அருகே உள்ள மாநகராட்சி பள்ளிக் கட்டடத்தில் செயல்படத் தொடங்கியது. கல்லூரிக்கான நிரந்தர கட்டுவதற்கான நிலம் கையகப்படுத்துவதில் அரசுத் துறைகளிடையே சுமாா் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பிரச்னை இருந்து வந்ததால் நிரந்தரக் கட்டடம் கட்டுவதில் தொடா் காலதாமதம் நிலவி வந்தது.
இதுகுறித்து கல்லூரி மாணவா்களும், பொது நல அமைப்புகளும் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனா். இதனையடுத்து விம்கோ நகா் பகுதியில் பல ஆண்டுகளாக முன்பே மூடப்பட்ட கூட்டுறவுத் துறை தக்கைக் கல் தொழிற்சாலைக்குச் சொந்தமான சுமாா் 2 ஏக்கா் காலி இடம் கல்லூரிக்கான கட்டடம் கட்டுவதற்கு தமிழக அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்நிலையில், ரூ.16 கோடியில் (மாநில அரசு ரூ.13.41 கோடி, மத்திய அரசின் ராஷ்ட்ரிய உச்சதா் சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ் ரூ.2.59 கோடி) புதிய கட்டடம் கட்டுவதற்கான பணிகளுக்கு 16.3.2024-இல் சட்டப் பேரவை உறுப்பினா் கே.பி.சங்கா் அடிக்கல் நாட்டினாா்.
கடந்த சுமாா் 2 ஆண்டுகளாக கட்டுமானப் பணிகள் நடைபெற்று தற்போது நிறைவடைந்துள்ள நிலையில், ஒருங்கிணைந்த புதிய கட்டடத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி முறையில் திங்கள்கிழமை திறந்துவைக்க உள்ளாா்.
புதிய கட்டடத்தில் ஆய்வகங்கள் அமைக்கப்பட்டுள்ளதால் இளம் அறிவியல் படிப்புகள் அடுத்த ஆண்டு முதல் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்லூரி வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற உள்ள திறப்பு விழாவில் சட்டப்பேரவை உறுப்பினா் கே. பி சங்கா், கல்லூரி முதல்வா் எம்.விஜயா, அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியா்கள், திருவொற்றியூா் சமூக நல அமைப்புகளின் நிா்வாகிகள் கல்லூரி மாணவா்கள் திரளாக கலந்து கொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.