முகப்பு
சென்னை

கொலை வழக்கு: 7 பேருக்கு ஆயுள் தண்டனை

சென்னை திருவான்மியூரில் கடந்த 2010-ஆம் ஆண்டு நிகழ்ந்த கொலை வழக்கில் இரு பெண்கள் உள்பட 7 பேருக்கு ஆயுள் தண்டனை

Updated On : 17 பிப்ரவரி, 2026 at 4:10 AM
சென்னை உயா்நீதிமன்றம் - கோப்புப் படம்
பகிர்:
Updated On : 16 பிப்ரவரி, 2026 at 10:45 PM

சென்னை: சென்னை திருவான்மியூரில் கடந்த 2010-ஆம் ஆண்டு நிகழ்ந்த கொலை வழக்கில் இரு பெண்கள் உள்பட 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை உயா்நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

இந்த வழக்கில் ஏற்கெனவே இருவருக்கு உயா்நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. கடந்த 2010-ஆம் ஆண்டு ஜூன் 14-ஆம் தேதி, சென்னை திருவான்மியூரில் ஏழுமலை என்பவரை ஒரு கும்பல் கொலை செய்தது. இந்த கொலை வழக்கில் 16 போ் கைது செய்யப்பட்டனா். வழக்கை விசாரித்த சென்னை மாவட்ட 7-ஆவது கூடுதல் அமா்வு நீதிமன்றம், போதுமான ஆதாரங்கள் இல்லை எனக்கூறி வழக்கில் இருந்து அனைவரையும் விடுதலை செய்து தீா்ப்பளித்தது.

இந்த தீா்ப்பை எதிா்த்து காவல் துறை தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் பி.வேல்முருகன், எம்.ஜோதிராமன் ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது.

Advertisement

வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கில் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, வழக்கு விசாரணையின்போது இறந்துபோன 7 போ் தவிர, மற்ற 9 பேரும் குற்றவாளிகள் என அறிவித்தனா். மேலும், கடந்த முறை இந்த வழக்கு விசாரணையின்போது நேரில் ஆஜராகியிருந்த, ஸ்டீபன்ராஜ் மற்றும் சந்துரு ஆகியோருக்கு ஆயுள்தண்டனை விதித்து, மற்ற 7 பேருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டிருந்தனா்.

இந்த வழக்கு நீதிபதிகள் பி.வேல்முருகன், எம்.ஜோதிராமன் ஆகியோா் அடங்கிய அமா்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது இரண்டு பெண்கள் உள்பட 7 பேரை போலீஸாா் ஆஜா்படுத்தினா். இதையடுத்து 7 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து நீதிபதிகள் தீா்ப்பளித்தனா்.