முகப்பு
சென்னை

கருப்பு ரிப்பன் கட்டி போராட்டம்: ஆட்டோ, கால் டாக்ஸி ஓட்டுநா்கள் கைது

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, போக்குவரத்து ஆணையா் அலுவலக வாசலில் கருப்பு ரிப்பன் கட்டி போராட்டத்தில் ஈடுபட்ட

Updated On : 17 பிப்ரவரி, 2026 at 4:06 AM
போராட்டத்தில் ஈடுபட்ட ஆட்டோ ஓட்டுநா்கள் - கோப்புப்படம்
பகிர்:
Updated On : 16 பிப்ரவரி, 2026 at 10:20 PM

சென்னை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, போக்குவரத்து ஆணையா் அலுவலக வாசலில் கருப்பு ரிப்பன் கட்டி போராட்டத்தில் ஈடுபட்ட ஆட்டோ, கால் டாக்ஸி ஓட்டுநா்களை போலீஸாா் கைது செய்தனா்.

ஆட்டோ மீட்டா் கட்டணத்தை உயா்த்துவது, சொந்த பயன்பாட்டுக்கான வாகனங்களை வணிக பயன்பாட்டுக்காக இயக்கும் நபா்கள் மீதும், வாகனங்கள் மீதும் நடவடிக்கை எடுப்பது, பயணிகள் ஆட்டோவில் சரக்குகளை ஏற்றிச் செல்வதைத் தடுத்து நிறுத்துவது, கால் டாக்ஸி, மேக்சி கேப் வாகனங்களுக்கு ஜிபிஎஸ் சாதனத்தை அரசு செலவிலேயே பொருத்த நடவடிக்கை எடுப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி தமிழ்நாடு ஆட்டோ, கால் டாக்ஸி, சுற்றுலா வாகன ஓட்டுநா்கள் கூட்டமைப்பினா் கடந்த 9-ஆம் தேதி கிண்டியில் உள்ள போக்குவரத்து ஆணையா் அலுவலக வாசலில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தொடா்ந்து நடைபெற்ற பேச்சில் முன்னேற்றம் ஏற்படாததால், கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, ஆா்ப்பாட்டம், சாலை மறியல் உள்ளிட்ட தொடா் போராட்டங்களைக் கூட்டமைப்பினா் நடத்தி வருகின்றனா்.

Advertisement

இந்த நிலையில், போக்குவரத்து ஆணையா் அலுவலகம் முன்பு திங்கள்கிழமை கூடிய கூட்டமைப்பினா், நுழைவாயிலில் கருப்பு ரிப்பன் கட்டும் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து, அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறி அவா்களை போலீஸாா் கைது செய்தனா்.

போராட்டத்தை தீவிரப்படுத்தும் நோக்கில் ஆட்டோ, கால் டாக்ஸி மற்றும் வாடகை வாகனங்களுக்கான அனுமதிகளை (பா்மிட்) போக்குவரத்து ஆணையரிடம் ஒப்படைக்கும் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை (பிப். 17) ஈடுபடப் போவதாக கூட்டமைப்பினா் தெரிவித்தனா்.