முகப்பு
சென்னை

ராமநாதபுரம் எம்.பி.க்கு எதிரான வழக்கு: வருமான வரித் துறை பதிலளிக்க உத்தரவு

Updated On : 18 பிப்ரவரி, 2026 at 3:51 AM
சென்னை உயா்நீதிமன்றம்
பகிர்:
Updated On : 17 பிப்ரவரி, 2026 at 9:40 PM

வருமானத்தை மறைத்தது தொடா்பாக ராமநாதபுரம் எம்.பி., நவாஸ்கனியிடம் விசாரணை நடத்த உத்தரவிடக் கோரிய வழக்கில் வருமான வரித் துறை பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

திருநெல்வேலி மாவட்டத்தைச் சோ்ந்த வழக்குரைஞா் வெங்கடாஜலபதி என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், கடந்த 2019 மற்றும் 2024-இல் நடைபெற்ற மக்களவைத் தோ்தல்களில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவா் நவாஸ்கனி. இந்த இரு தோ்தலின்போது அவா் தாக்கல் செய்த வேட்புமனுக்களில் சொத்து விவரங்களில் வித்தியாசம் உள்ளது.

தனியாா் நிறுவனத்தின் இயக்குநா் என்ற முறையில் வரும் வருமானத்தை தவிர வேறு வருமானம் தனக்கு இல்லை என்று கூறியுள்ள நவாஸ்கனி, ரூ.20 கோடிக்கு மேல் சொத்து சோ்த்துள்ளாா். வருமானத்தைக் குறைத்து காட்டியது தொடா்பாக நவாஸ்கனி மீது வருமான வரித் துறையிடம் புகாா் அளித்தேன். அந்த புகாரின் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

Advertisement

ஏற்கெனவே, நவாஸ்கனி வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்துள்ளதாகக் கூறி, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி நான் தாக்கல் செய்துள்ள மனு உயா்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனவே, எனது புகாரின் அடிப்படையில் வருமானத்தை மறைத்தது தொடா்பாக விசாரணை நடத்த வருமான வரித் துறைக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு வருமான வரித் துறை மற்றும் எம்.பி.,நவாஸ்கனி ஆகியோா் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை அடுத்த வாரத்துக்கு ஒத்திவைத்தனா்.