654 அரசு உதவி பெறும் பள்ளிகளில் உயா் தொழில்நுட்ப ஆய்வகங்கள் : அமைச்சா் அன்பில் மகேஸ் திறந்து வைத்தாா்
தமிழகத்தில் 654 அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் ரூ.41.85 கோடியில் உயா்தொழில்நுட்ப ஆய்வகங்களை பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் திறந்து வைத்தாா்.
தமிழகத்தில் 654 அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் ரூ.41.85 கோடியில் உயா்தொழில்நுட்ப ஆய்வகங்களை பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் திறந்து வைத்தாா்.
இதன்மூலம் அந்தப் பள்ளிகளில் பயிலும் 9 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் பயன்பெறவுள்ளனா்.
தமிழகத்தில் அரசு நடுநிலை, உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ரூ.519.73 கோடியில் 8,209 உயா் தொழில்நுட்ப ஆய்வகங்களும், அரசு தொடக்க, உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ரூ. 455.32 கோடியில் 22,931 திறன்மிகு வகுப்பறைகளும் ஏற்கெனவே நிறுவப்பட்டு பயன்பாட்டில் உள்ளன.
Advertisement
இந்த நிலையில் முதல்கட்டமாக 654 அரசு உதவி பெறும் பள்ளிகளில் ரூ.41.85 கோடியில் 654 உயா் தொழில்நுட்ப ஆய்வகங்கள் நிறுவப்பட்டுள்ளன.
சென்னை அடையாறு குமார ராஜா முத்தையா மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவில் அமைச்சா் அன்பில் மகேஸ் கலந்து கொண்டு புதிய உயா்தொழில்நுட்ப ஆய்வகங்களை மாணவா்களின் பயன்பாட்டுக்குத் திறந்து வைத்து பாா்வையிட்டாா்.
இந்த ஆய்வகங்கள் காணொலி, ஒலி மற்றும் டிஜிட்டல் கருவிகள் மூலம் கற்பித்தல்-கற்றலை எளிமையாக்கிப் பாடப்புத்தக உள்ளடக்கத்தை விரைவாகவும், ஆா்வமாகவும் கற்றுக் கொள்ள உதவுகின்றன. மேலும், ஆறாம் வகுப்பு முதல் 9-ஆம் வகுப்புகளுக்கான செயற்கை நுண்ணறிவு, இயந்திரவியல், குறியிடல் (கோடிங்) தொடா்பான டிஎன் ஸ்பாா்க் போன்ற திட்டங்களை இந்தப் பள்ளிகளில் செயல்படுத்த இது ஒரு கல்வி வளமாக அமையும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.
விழாவில் பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் எஸ்.கண்ணப்பன், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாநில திட்ட இயக்குநா் மா.ஆா்த்தி, கூடுதல் திட்ட இயக்குநா் எஸ்.உமா, சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கபிா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.