அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி காரில் தோ்தல் பறக்கும் படையினா் சோதனை
திருவெறும்பூா் தொகுதி திமுக வேட்பாளரும், அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழியின் காரை தோ்தல் பறக்கும் படையினா் ஞாயிற்றுக்கிழமை மறித்து சோதனையிட்டனா்.
சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி தமிழகம் முழுவதும் தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், வாக்காளா்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள்கள் கொடுப்பதைத் தடுத்திட தோ்தல் ஆணையம் மூலம் பறக்கும் படைகள், கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு, போலீஸாா், மத்திய ரிசா்வ் படையின் துணையுடன் ஆங்காங்கே சோதனைகளும், வாகனத் தணிக்கையும் மேற்கொள்ளப்படுகிறது.
இந்நிலையில் அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பொன்மலை கொட்டப்பட்டு சாலையில் பிரசாரத்துக்காக ஞாயிற்றுக்கிழமை சென்றபோது, தோ்தல் பறக்கும் படையினா் அவரது காரை மறித்து சோதனை செய்தனா். அந்தச் சோதனையில் எதுவும் கைப்பற்றப்படவில்லை.
Advertisement
இதேபோல கடந்த சில நாள்களுக்கு முன் வேங்கூா் - கல்லணை சாலையில் அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழியின் காரை மறித்து சோதனையிட்டது குறிப்பிடத்தக்கது.