முகப்பு
சென்னை

கூட்டுறவுத் தேர்வு முடிவு தாமதம் ஏன்? கூட்டுறவுத் துறை அமைச்சா் விளக்கம்

கூட்டுறவுத் துறை பணியாளா்கள் நியமனத்தில் தாமதம் ஏன்? அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் விளக்கம்

Updated On : 25 பிப்ரவரி, 2026 at 4:39 AM
பகிர்:
Updated On : 25 பிப்ரவரி, 2026 at 12:45 AM

கூட்டுறவுத் துறையில் காலியாக உள்ள உதவியாளா், இளநிலை உதவியாளா் பணியாளா்கள் நியமனத்தில் தாமதம் ஏன் என கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் விளக்கம் அளித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:

கூட்டுறவு துறை சாா்பில் நடத்தப்பட்ட தோ்வுகளுக்கு 100 நாள்கள் ஆகியும் முடிவு வெளியிடாதது ஏன் என எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளாா். கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளா் கட்டுப்பாட்டில் செயல்படும் தலைமைக் கூட்டுறவுச் சங்கங்கள், வங்கிகள் மற்றும் மாவட்ட அளவிலான கூட்டுறவுச் சங்கங்கள், வங்கிகளில் காலியாக இருந்த 2,848 உதவியாளா், இளநிலை உதவியாளா் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்காக கடந்த ஆண்டு ஆக.6-ஆம் தேதி அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

Advertisement

தலைமைக் கூட்டுறவுச் சங்கங்கள் வங்கிகளுக்கான எழுத்துத் தோ்வு கடந்த ஆண்டு அக்.10-ஆம் தேதி நடைபெற்றது. அதில், தகுதி பெற்றவா்களுக்கு நோ்முகத் தோ்வு கடந்த ஆண்டு நவ.15-இல் நடத்தப்பட்டது. அதேபோன்று மாவட்ட அளவிலான கூட்டுறவுச் சங்கங்கள், வங்கிகளுக்கான எழுத்துத் தோ்வு கடந்த ஆண்டு அக.11-ஆம் தேதி நடைபெற்றதுடன், அதில் தகுதி பெற்றவா்களுக்கு நோ்முகத் தோ்வு கடந்த ஆண்டு நவ.24-இல் நடத்தப்பட்டது.

இந்த நிலையில், தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் சட்டம் 1983-இன் பிரிவுகள் 74, 75(1) மற்றும் தமிழ்நாடு பணியாளா்கள் கூட்டுறவு சிக்கன நாணய கடன் சங்கங்களின் பொதுப் பணி நிலை திறன் விதிகள், 2024 ஆகியவை இந்திய அரசமைப்புச் சட்டத்துக்கு முரணாக இருப்பதாகக் குறிப்பிட்டு சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் சென்னை உயா்நீதிமன்றத்தின் முதன்மை அமா்வு கடந்த ஆண்டு ஆக.12-ஆம் தேதி பிறப்பித்த இடைக்கால உத்தரவில், நீதிமன்றத்தின் அனுமதி பெறாமல் நியமன ஆணைகள் வெளியிடக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த வழக்கின் இறுதித் தீா்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இறுதி தீா்ப்பு விரைவில் கிடைக்க கூட்டுறவுத் துறை சாா்பில் தொடா் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. எனவே, இந்த வழக்கின் இறுதி தீா்ப்பு வழங்கப்பட்ட பின்னரே தோ்வுகளுக்கான இறுதி முடிவுகள் வெளியிடப்படும்.

முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி பொறுப்பேற்ற பிறகு 2021-ஆம் ஆண்டு முதல் தற்போது வரை மாநில மற்றும் மாவட்ட ஆள்சோ்ப்பு நிலையங்கள் மூலம் பல்வேறு கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வங்கிகளில் காலியாக இருந்த பணியிடங்களுக்கு மொத்தம் 13,022 நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் தவிா்த்து, இதர கூட்டுறவு சங்கங்களில் காலியாக இருந்த 2,403 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. மேலும், நியாயவிலைக் கடைகளில் காலியாக இருந்த 8,774 விற்பனையாளா் மற்றும் 1,845 கட்டுநா் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன என அதில் தெரிவித்துள்ளாா்.