நடிகரும் தவெக தலைவருமான விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ படத்துக்கு தணிக்கை சான்று கோரிய வழக்கில் சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி பி.டி.ஆஷா வெள்ளிக்கிழமை (ஜன.9) தீா்ப்பளிக்கவுள்ளாா்.
கே.வி.என். புரொடக்சன் நிறுவனம் தயாரித்து ஹெச்.வினோத் இயக்கி இந்தத் திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெள்ளிக்கிழமை (ஜன.9) வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தப் படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் கிடைக்கவில்லை.
இதைத்தொடா்ந்து, படத் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் சான்றிதழ் வழங்க மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்துக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின்போது, ஒரு படத்துக்கு தணிக்கை சான்று வழங்கும்வரை மறுஆய்வு செய்ய தணிக்கை வாரியத்துக்கு முழு அதிகாரம் இருப்பதாக வாதிடப்பட்டது. ‘ஜனநாயகன்’ படத்தை மறுஆய்வு குழுவுக்கு பரிந்துரைத்த மத்திய திரைப்பட தணிக்கை வாரியத் தலைவரின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என வாதிடப்பட்டது.
இதையடுத்து இந்த வழக்கு தீா்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில், வெள்ளிக்கிழமை (ஜன.9) காலை 10.30 மணிக்கு இந்த வழக்கில் சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி பி.டி.ஆஷா தீா்ப்பளிக்கிறாா்.