ஜனநாயகன் படத்தின் போஸ்டர். 
தமிழ்நாடு

ஜனநாயகன் படத்துக்கு தணிக்கைச் சான்று: இன்று விசாரணை!

ஜனநாயகன் பட தணிக்கைச் சான்று வழக்கு தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணை.

இணையதளச் செய்திப் பிரிவு

நடிகர் விஜய்யின் ஜனநாயகன் படத்துக்கு யு/ஏ சான்றிதழ் வழங்க தனி நீதிபதி உத்தரவிட்டதற்கு எதிராக திரைப்பட தணிக்கை வாரியம் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு இன்று(ஜன. 20) சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.

தவெக தலைவரும் நடிகருமான விஜய் நடித்த ஜனநாயகன் படத்துக்கு தணிக்கைச் சான்று வழங்க தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் கே.வி.என்.புரொடக்சன் நிறுவனம் தாக்கல் செய்த மனுவில், விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜன. 9-ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில், படத்துக்கு தணிக்கைச் சான்று வழங்க மறுத்த வாரியம் மறுஆய்வுக் குழுவுக்கு பரிந்துரைத்தது. வாரியத்தின் உத்தரவை ரத்து செய்து, ‘ஜனநாயகன்’ படத்துக்கு தணிக்கைச் சான்று வழங்க உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தது.

இந்த வழக்கை நீதிபதி பி.டி.ஆஷா விசாரித்தபோது தணிக்கை வாரியம் தரப்பில், ‘ஜனநாயகன்’ படத்தில் மத ரீதியான ஆட்சேபணைக்குரிய காட்சிகள் இடம்பெற்றுள்ளன. பாதுகாப்புப் படை சின்னங்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. எனவே, இந்தப் படத்தை மறுஆய்வுக் குழு பாா்வையிட தணிக்கை வாரியத் தலைவர் உத்தரவிட்டது.

இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி பி.டி.ஆஷா, ‘ஜனநாயகன்’ படத்தை கடந்த டிச. 22-ஆம் தேதி பார்த்த தணிக்கைக் குழு உறுப்பினர்கள், படத்துக்கு யு/ஏ சான்றிதழ் வழங்க பரிந்துரை செய்தனர். அதன்பின்னர், உறுப்பினர்களில் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் இந்தப் படத்தை மறுஆய்வுக் குழுவுக்கு தணிக்கை வாரியத் தலைவர் அனுப்பினார்

சான்றிதழ் வழங்க தணிக்கைக் குழு உறுப்பினர்கள் பரிந்துரைத்த பின்னர், இந்த முடிவை வாரியத்தின் தலைவர் எடுத்துள்ளார். தணிக்கைக் குழு சான்றிதழ் வழங்க பரிந்துரைத்த பின்னா் மறுஆய்வுக் குழுவுக்கு பரிந்துரை செய்யும் முடிவை எடுக்க அவருக்கு அதிகாரம் இல்லை எனக் கூறி, தணிக்கை வாரியத் தலைவரின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும், ‘ஜனநாயகன்’ படத்துக்கு உடனடியாக தணிக்கைச் சான்று வழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

தணிக்கை வாரியம் மேல்முறையீடு: தனி நீதிபதியின் உத்தரவை எதிா்த்து மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் சாா்பில் கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் ஏ.ஆா்.எல்.சுந்தரேசன், தலைமை நீதிபதி அமா்வில் மேல்முறையீடு செய்தாா். இந்த மேல்முறையீட்டு வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் அவசர வழக்காக விசாரணைக்கு வந்தது.

அப்போது தணிக்கை வாரியம் தரப்பில் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா, ‘ஜனநாயகன்’ படத்தை மறுஆய்வுக் குழுவுக்கு பரிந்துரைத்ததை எதிா்த்து தொடரப்பட்ட வழக்கு ஜன. 6-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. ஜன. 7-ஆம் தேதி படத்துக்கு எதிரான புகாா் உள்ளிட்ட ஆவணங்களைத் தாக்கல் செய்தோம். ஆனால், தணிக்கை வாரியம் தரப்பில் பதில்மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்காமல், தனி நீதிபதி அவசரகதியில் ஜன. 9-ஆம் தேதி இந்த வழக்கில் தீா்ப்பளித்துவிட்டாா்.

இந்தப் படத்தில் மத உணா்வுகளைப் புண்படுத்தும் காட்சிகள், பாதுகாப்புச் சின்னங்கள் தொடா்பான காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதுகுறித்து புகாா் வந்ததால், மறுஆய்வுக் குழுவுக்கு படம் பரிந்துரைக்கப்பட்டது. இவ்வாறு பரிந்துரைக்க தணிக்கை வாரியத்துக்கு அதிகாரம் உள்ளது. மனுதாரா் இதை எதிா்த்து வழக்கு தொடரவில்லை. படத்துக்கு தணிக்கைச் சான்று கேட்டுத்தான் வழக்கு தொடா்ந்துள்ளாா். ஆனால், மறுஆய்வுக் குழுவுக்கு பரிந்துரை செய்ய அதிகாரம் இல்லை என்ற தனி நீதிபதியின் உத்தரவு சரியல்ல. எனவே, தனி நீதிபதி உத்தரவுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று வாதிட்டாா்.

இடைக்காலத் தடை: பின்னர், ‘ஜனநாயகன்’ படத்துக்கு தணிக்கைச் சான்று வழங்கும் தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், இந்த மேல்முறையீட்டு மனுவுக்கு படத் தயாரிப்பு நிறுவனம் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா அமர்வில் இன்று காலை 11.30 மணியளவில் விசாரணைக்கு வரவுள்ளது.

The Chennai High Court is hearing the case regarding the censor certificate for the film 'Jananayagan'.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

3 ஆவது நாளாக..! ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிரான தேடுதல் வேட்டை!

பாஜக தேசிய தலைவராகப் பொறுப்பேற்றார் நிதின் நவீன்!

இந்தியாவில் மலிவாகக் கிடைக்கும் இரண்டு பொருள்கள்! உலக சுகாதார நிறுவனம் சிவப்புக்கொடி

பேரவைத் தலைவர் அப்பாவு வாசித்த ஆளுநர் உரையில் இடம்பெற்றது என்ன?

மைக்கை அணைக்கவில்லை; ஆளுநரின் குற்றச்சாட்டுகள் முற்றிலும் பொய்! அமைச்சர் ரகுபதி

SCROLL FOR NEXT